PUBLISHED ON : ஜூலை 02, 2026 12:49 AM

முனைவர் செ.அ.ராகுல் கோல்டன், உதவிப் பேராசிரியர், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற அரசு பேராசிரியர் தேர்வு முடிவு குறித்து, பல்வேறு தரப்பினர் பல சந்தேகங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இத்தேர்வு, வெளிப்படைத்தன்மையுடன், திறமைக்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலும் நடத்தப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு!
ஒரு திறமையான ஆசிரியரை வெறும் எழுத்து தேர்வின் வாயிலாக மட்டும் கண்டுபிடிக்க முடியாது; அவரின் கற்பித்தல் திறன், ஆராய்ச்சி மனப்பான்மை, மாணவர்களை ஊக்குவிக்கும் திறன், தொழில்நுட்ப பயன்பாடு, சமூகப் பொறுப்பு போன்ற அனைத்தும் மதிப்பிடப்பட வேண்டும்.
அவ்வகையில், உதவிப் பேராசிரியர் தேர்வு என்பது நான்கு நிலைகளில் நடைபெற வேண்டும். அவை:
l ஒவ்வொரு விண்ணப்பதாரரும், குறைந்தது 20 நிமிடங்கள் மாதிரி வகுப்பை நடத்த வேண்டும். மாணவர்களுக்கு பாடத்தை எவ்வாறு எளிமையாகவும், சுவாரசியமாகவும் கற்பிக்கிறார் என்பதை, மதிப்பிட வேண்டும். இதன்வாயிலாக, ஆசிரியரின் கற்பிக்கும் திறன் வெளிப்படும்
l ஆராய்ச்சி மற்றும் தரமான ஆய்விதழ்களில் வெளியான கட்டுரைகள், காப்புரிமைகள், புத்தகங்கள், ஆராய்ச்சி திட்டங்கள், தொழில்துறை இணைப்புகள், சமூகப் பயன்பாட்டுத் திட்டங்கள் போன்றவற்றை மதிப்பீடு செய்து, மதிப்பெண்கள் வழங்க வேண்டும்
l நேர்முகத் தேர்வு காணொளியாக பதிவு செய்யப்படுவதுடன், மதிப்பெண்கள் எந்த அடிப்படையில் வழங்கப்பட்டன என்பதும் பதிவாக இருக்க வேண்டும்; மேலும், உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்யும் குழுவில் பல்கலை பேராசிரியர்கள் மட்டுமின்றி, தேசிய அளவிலான கல்வியாளர்களும் இடம்பெற வேண்டும்
l தேர்வுக்கான அதிகாரப்பூர்வ விடைக்குறிப்பு உடனடியாக வெளியிடப்படுவதுடன், ஆட்சேபனை தெரிவிக்க விண்ணப்பதாரர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்க வேண்டும்; அதேபோன்று, இறுதி விடைக்குறிப்பு மற்றும் மதிப்பெண்களும் வெளிப் படையாக வெளியிடப்பட வேண்டும்
ஓர் உதவிப் பேராசிரியர், பாடத்தை மட்டும் கற்பிப்பவராக இருக்கக் கூடாது; தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் திறன்களையும் பெற்றிருக்க வேண்டும்.
ஒரு நாட்டின் உயர் கல்வியின் தரம், அதன் ஆசிரியர்களின் தரத்தைப் பொறுத்தே அமைகிறது. ஆகவே, பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் தேர்வுகள், எந்தவித சந்தேகத்திற்கும் இடமளிக்காத வகையில் வெளிப் படைத் தன்மையுடன் நடத்தப்பட வேண்டும்.
அப்போதுதான் திறமையான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்; அவர்களாலேயே கல்வி மற்றும் ஒழுக்கத்தில் சிறந்த மாணவர் சமுதாயம் உருவாகும்!
வார்த்தை போரில் இறங்காத விஜய்!
அபிராமி அருண், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில், இந்திய அரசின் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதை மறுபரிசீலனை செய்யக் கோரி, பிரதமர் மோடிக்கு விஜய் எழுதிய கடிதத்தில், ஒன்றிய அரசு என்ற வார்த்தை நீக்கப்பட்டு, மத்திய அரசு என்ற அதிகாரப்பூர்வமான வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.
'மத்திய அரசுடன் எவ்வித மோதலும் இன்றி, மாநில உரிமைகளை சுமுகமாகப் பெற்று செயல்படுவோம்...' என்று, சட்டசபையில் த.வெ.க., அரசு கொடுத்த உறுதிமொழியின்படி, இந்த வார்த்தை மாற்றம் அரங்கேறியுள்ளது.
'முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா' என்பது போல் செயல்பட்டார், முன்னாள் முதல்வர் ஸ்டாலின். அவரைப் போல் மத்திய அரசுடன் வீணான வார்த்தைப் போரில் இறங்கி, எனர்ஜியை வீணடிக்காமல், காரியத்தைச் சாதிக்கும் எதார்த்த அரசியலை நோக்கி விஜய் திரும்பியுள்ளது, பாராட்டுக்குரிய விஷயம்!
கொத்தடிமைத்தனத்திற்கு மூக்கணாங்கயிறு!
ப.ராஜேந்திரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
நாடு விடுதலைக்கு பின், நக்சலைட்டுகள் பிரச்னை ஆட்சியாளர்களுக்கு பெரும் தலைவலியாக இருந்தன. அதிலும், சட்டீஸ்கர், ஜார் கண்ட், ஒடிஷா, பீஹார், ஆந்திரா, மஹாராஷ்டிரா மற்றும் மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில், பல மாவட்டங்கள், நக்சலைட்டுகளின் வன்முறையால் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இவர்களின் கொட்டத்தை ஒழிக்க முடியாமல், காங்., அரசு திண்டாடியது என்றே சொல்லலாம்!
கடந்த 2014ல் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின், கடந்த 12 ஆண்டுகளாக மத்திய அரசு எடுத்த தீவிர பாதுகாப்பு நடவடிக்கையாலும், நக்சல்களின் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் மேற்கொண்ட வளர்ச்சி திட்டங்களாலும், இன்று நக்சலைட்டுகளின் ஆதிக்கம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது.
இதுபோன்று ஒழிக்கப்பட வேண்டிய மற்றொன்று, கொத்தடிமைத் தனம்!
உ.பி.,யின் முசாபர் நகர் பகுதியில், ஒரு தொழிற்சாலையில் கொத்தடிமைகளாக இருந்து, சித்ரவதை அனுபவித்து வந்த பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 13 பேரை போலீசார் மீட்டுள்ளனர்.
சாட்டையால் அடித்தும், உடம்பில் சூடு போட்டும், நாய்களை ஏவி கடிக்க விட்டும் அத்தொழிலாளர்களை சித்ரவதை செய்துள்ளனர்.
வறுமையின் பிடியில் சிக்கி உள்ளோர் குறி வைக்கப்பட்டு, இதுபோன்று செங்கல் சூளைகள், அரிசி ஆலைகள், கரும்பு தோட்டங்கள், கல் குவாரிகள், நுாற்பாலைகள் போன்றவற்றில் கொத்தடிமைகளாக மாற்றப் படுகின்றனர்.
இதேபோன்று தான், தென்கிழக்கு ஆசிய நாடுகளான கம்போடியா, தாய்லாந்து, மியான்மரில் பல, 'ஆன்லைன்' மோசடி கும்பல்கள் இயங்குகின்றன.
இக்கும்பல், இந்தியா உட்பட ஆசிய நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களை, நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை என்று கூறி அழைத்துச் சென்று, ஆன்லைன் வாயிலாக பண மோசடி செய்யும் அடிமைகளாக மாற்றுகின்றனர்.
வீட்டின் வறுமையை போக்கவும், குடும்ப பொருளாதார வளத்தை உயர்த்த நினைக்கும் இளைஞர்கள், போலி ஏஜன்ட்டுகளின் ஏமாற்று வலையில் விழுந்து, மோசடி கும்பல்களிடம் சிக்கி, கொத்தடிமைகளாக மாற்றப்பட்டு தங்கள் எதிர்காலத்தை இழக்கின்றனர்.
வேறு மாநிலம் மற்றும் நாடுகளுக்கு கடத்திச் சென்று, கொத்தடிமைகளாக மாற்றும் கும்பல்களை ஒழிக்க, மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து செயல்பட வேண்டும். நக்சலைட்டுகள் ஒடுக்கப்பட்டது போல், இக்கும்பல்களுக்கும் மூக்கணாங்கயிறு போட்டால் தான், அப்பாவி இளைஞர்களும், ஏழை மக்களும் கொத்தடிமைத்தனத்தில் இருந்து மீள்வர்!
