தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ நேர்மையாக இருந்தால் சாதனை படைக்கலாம்!

 நேர்மையாக இருந்தால் சாதனை படைக்கலாம்!

 நேர்மையாக இருந்தால் சாதனை படைக்கலாம்!


PUBLISHED ON : ஜூலை 01, 2026 12:21 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 01, 2026 12:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அ.குணா, கடலுாரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் போன்று, தமிழகத்தில் கல்வி துறையில் புரட்சி செய்தவர்கள் எவரும் இல்லை. ஏழை எளியவர்களுக்கு கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக, அவர் ஆட்சியில் பள்ளி நடத்துவதற்கான அனுமதி மிகவும் எளிமையாக இருந்தது.

அதேநேரம், தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் அதிகப்படியாக வசூல் செய்வதற்கும்; புதிய கட்டடங்கள் கட்ட அனுமதி அளிக்கும் போது, மாணவர்களின் பாதுகாப்பு, இடவசதி மற்றும் சுகாதாரமான குடிநீர், கழிப்பறைகள் போன்றவைகள் மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் இருக்க வேண்டும் என்பதிலும் கடுமையான விதிமுறைகள் வகுக்கப்பட்டன.

ஒரு முறை, தனியார் பள்ளி தாளாளர் ஒருவர், தன் பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்ட அனுமதி கோரிய போது, அதற்கான போதிய வசதிகள் இல்லாத காரணத்தால், கல்வி அதிகாரி மறுத்துவிட்டார்.

காமராஜரிடம் சென்று புகார் அளித்தார், தாளாளர்.

காமராஜரோ, 'கல்வி அதிகாரி சட்டத்திட்டத்திற்கு உட்பட்டு, நியாயமான முறையில் அனுமதி மறுத்திருந்தால், அதில் நான் தலையிட முடியாது' என்று கூறி அனுப்பி விட்டார்.

அன்று காமராஜர் மட்டும் அல்ல; அவருக்கு கீழ் பணிபுரிந்த அதிகாரிகளும் நேர்மையானவர்களாக இருந்தனர்; அதனால் தான், அவரது ஆட்சியில் கல்வி புரட்சி நடந்தது.

திராவிடக் கட்சிகளின் ஆட்சியிலோ, கல்வி என்பது வணிகமாக மாறி விட்டது. பின், எப்படி அதிகாரிகளிடம் நேர்மையான செயல்பாடுகளை எதிர்பார்க்க முடியும்?

தற்போது, 100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கில், தி.மு.க., நிர்வாகி அரசகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர், தனியார் பள்ளிகளுக்கு தடையின்மை சான்று, நிரந்தர அங்கீகாரம் மற்றும் பள்ளிகளின் தரம் உயர்த்த அனுமதி பெற்று தருவதாக கூறி, 100 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து, அரசகுமாரை கைது செய்துள்ளனர்.

மேலும், கடந்த தி.மு.க., ஆட்சியில், பெற்றோர் - ஆசிரியர் கழகத்தின் முன்னாள் துணை தலைவர் முத்துகுமார், 300 கோடி ரூபாய்க்கும் மேலாக பணம் வசூலித்துள்ளார் என்று செய்தி வருகிறது.

இப்படி, திராவிட கட்சிகளின் ஆட்சியில கலெக் ஷன் கரப்ஷன், கமிஷன் உட்புகுந்து கல்வித் துறையையே கறையான் போல் அரித்து விட்டது.

தற்போது புதிதாக ஆட்சியில் அமர்ந்துள்ள தமிழக வெற்றிக் கழகம், கடந்த ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் செய்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்து வருவது பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

காமராஜரும், அவருக்கு கீழ் பணியாற்றிய அமைச்சர்களும் ஊழல் இல்லாத ஆட்சி செய்ததைப் போல், முதல்வர் விஜய் மற்றும் அவரது அமைச்சர்கள் நேர்மையான முறையில் ஆட்சி செய்தால், பள்ளிக் கல்வித்துறை மட்டுமல்லாமல், அனைத்து துறைகளிலும் சாதனை படைக்கலாம்!

----

சாதித்து காட்டுங்கள் முதல்வரே! கோ.தி.ஸ்ரீராம் விஷ்ணு, சென்னையில் இருந்து எழுதுகிறார்: கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது எனும் இடத்தில் அணை கட்ட திட்டமிட்டுள்ளதை எதிர்த்து, தமிழக சட்டசபையில் முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தை, அனைத்து கட்சிகளும் ஆதரித்த நிலையில், தற்போது, அ.தி.மு.க., - பா.ம.க., -- கம்யூனிஸ்ட் கட்சியினர் எதிர்க்கின்றனர்.

மேகதாதுவுக்கு மட்டும் தனியாக ஒரு நடுவர் மன்றம் அமைக்க, மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கொடுத்த ஒரு தீர்மானத்தையும் சேர்த்துக் கொண்டது தவறு என்றும், 'அவ்வாறு தனியாக ஒன்று அமைக்கும்போது, ஏற்கனவே உள்ள காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு நீர்த்து போகும்; அதனால், நமக்கு கிடைக்கும் காவிரி நீர் கிடைக்காமல் போகும்' என்றும், அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் கூறுகின்றன.

ஆனால், தமிழக அரசோ அதுபோல் நடக்காது என்கிறது. இதில், அ.தி.மு.க., சொல்வது சரியா இல்லை தமிழக அரசும், தி.மு.க.,வும் சொல்வது சரியா என்பதில் குழப்பம் ஏற் படுகிறது.

நமக்கு காவிரி நீர் எல்லா காலத்திலும் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும். அரசியல் சாயம் பூசாமல், சட்ட சிக்கல்களிலிருந்து விடுபட்டு, சாதித்துக் காட்டுங்கள் முதல்வரே!

------

இவர்களா ஜனநாயக காவலர்கள்?


வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சட்டசபை தேர்தலுக்கு முன், 'எங்கள் கூட்டணி மதச் சார்பற்ற, வலுவான கொள்கை கூட்டணி' என்றெல்லாம் கூறிய காங்கிரஸ், வி.சி.க., கம்யூனிஸ்டுகள், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், ம.தி.மு.க., போன்ற கட்சிகள், தேர்தலில் தி.மு.க., தோற்றவுடன், கொள்கையை குத்தகைக்கு விட்டு, த.வெ.க.,விற்கு தாவி விட்டன.

'நான், ஸ்டாலினை முதல்வராக்குவேன் என்று கருணாநிதிக்கு உறுதிமொழி அளித்துள்ளேன்; அது என் கடமை' என்று பாசப்பயிர் வளர்த்த ம.தி.மு.க., தலைவர் வைகோ, இன்று தி.மு.க., கூட்டணியில் தன் சுயமரியாதையை இழந்து, தனிச் சின்னத்தில் போட்டியிட முடியாமல் போய் விட்டதாக கூறி, த.வெ.க.,விற்கு தாவியுள்ளார்.

கருணாநிதிக்கு கொடுத்த வாக்கு காற்றோடு போய் விட்டது!

---------

இவர்கள் தான் கொள்ளை கூட்டணியாளர்கள்!


'ஆட்சி அதிகாரத்தின் பக்கம் சாயந்தால், பணமும், பதவியும் கிடைக்கும்; அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சி ஆதரவோடு பல இடங்களில் வென்று அதிகாரத்தை ருசித்து விடலாம்' என்ற ஆசையில் ஓடி வந்துள்ள இவர்கள், மத்திய பா.ஜ., அரசு மறைமுகமாக நடத்தும் கவர்னர் ஆட்சியை தவிர்க்கவே, த.வெ.க., பக்கம் தாவினோம் என்று கதை கூறுகின்றனர்.

இன்று, தி.மு.க.,வை நட்டாற்றில் விட்டு வந்துள்ள இக்கட்சியினர், நாளை, வேறொரு கட்சி ஆட்சிக்கு வந்தால், குரங்கு போல் அங்கே தாவி விடுவர்.

பதவி சுகத்திற்காக, பல கோடி ரூபாய் செலவழித்து வென்ற சட்டசபை உறுப்பினர் பதவியை, சிலர் ராஜினாமா செய்துள்ளதற்கு காரணமே, இடைதேர்தலில் த.வெ.க., சார்பில் போட்டியிட்டு வென்றால், பதவி கிடைக்கும்; பல்லக்கு ஏறலாம் என்ற நப்பாசை தான்!

நேரத்திற்கு ஏற்ப நிறத்தை மாற்றும் இந்த பச்சோந்தி மனிதர்கள் தான், ஜனநாயகத்தை காப்பாற்றும் காவலர்கள்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us