PUBLISHED ON : ஆக 15, 2024 12:00 AM

தமிழக முதல்வர் ஸ்டாலின்: இந்தியாவின் கல்வி ஆற்றல் மையமாக தமிழகம் தொடர்ந்து மின்னுகிறது. என்.ஆர்.எப்., 'ரேங்க்' பட்டியலில், 2024ம் ஆண்டு அதிகமான உயர்கல்வி நிறுவனங்களுடன், நம் மாநிலம் மற்றவர்களை விட, மிகவும் முன்னோக்கி நிற்பதுடன், தரமான கல்விக்கான அளவுகோலை நிர்ணயித்துள்ளது. நம் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முன்னணியில் இருக்கும் திராவிட மாடலுக்கு, இது ஒரு பெருமையான தருணம்.
டவுட் தனபாலு: வாழ்த்துகள்... ஆனாலும், அகில இந்தியகுடிமைப் பணி தேர்வுகள், ரயில்வே வாரியம் நடத்தும் தேர்வுகளில் வடமாநிலத்தவர் தானே கோலோச்சுறாங்க... தமிழர்களின் தேர்ச்சி விகிதம், ஆண்டுக்காண்டு குறைந்து கொண்டே வருவதன் காரணங்களையும் ஆராய்ந்து, அதற்கும் தீர்வு கண்டால், 'டவுட்'டே இல்லாம இன்னும் பாராட்டலாம்!
தேசியவாத காங்., கட்சியைச் சேர்ந்த, மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார்: லோக்சபா தேர்தலில் பாரமதி தொகுதியில், என் சகோதரி சுப்ரியா சுலேவுக்கு எதிராக, என் மனைவி சுனேத்ராவை நிறுத்தி தவறு செய்து விட்டதாக உணர்கிறேன். அரசியலை வீட்டுக்குள்கொண்டு வந்திருக்க கூடாது.
டவுட் தனபாலு: உங்க சித்தப்பா சரத் பவாருக்கு எதிராக, நீங்க அடிக்கடி அணி மாறுவதும், பதவியை அனுபவிப்பதும், கொஞ்ச நாள் கழிச்சு, 'தப்புபண்ணிட்டேன்... மன்னிச்சிடுங்க சித்தப்பு'ன்னு உருகுறதும்இன்னிக்கு, நேத்தா நடக்குது... இந்த வருஷ கடைசியில, உங்க மாநிலத்துல சட்டசபை தேர்தல்வர்றதால, மறுபடியும் மன்னிப்புநாடகத்தை அரங்கேற்றம் பண்றது,'டவுட்'டே இல்லாம தெரியுது!
பா.ம.க., தலைவர் அன்புமணி: டீசல் விலை உயர்வு, தொழிலாளர்கள் ஊதிய உயர்வுக்கு இணையாக, பஸ்கட்டணத்தை உயர்த்துவது குறித்து முடிவெடுக்க, தனி ஆணையம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக, 'தினமலர்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மின்கட்டணத்தை உயர்த்தி, அந்த பழியை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மீது தமிழக அரசு போட்டது. இப்போது பஸ் கட்டணத்தை உயர்த்தி, அந்த பழியில் இருந்து தப்பிக்க தனி ஆணையத்தை அமைக்கிறது.
டவுட் தனபாலு: பஸ் கட்டணத்தையும் ஏத்தக் கூடாது... தொழிலாளர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கணும்... மகளிர்,பள்ளி மாணவர்களுக்கு இலவச பயணமும் தந்தாகணும் என்ற மும்முனை தாக்குதலில், போக்குவரத்து கழகத்துக்கு வேறுவழி இல்லாம தான், இந்த முடிவை எடுத்திருக்காங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!