PUBLISHED ON : ஆக 16, 2024 12:00 AM

சிவகங்கை காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம்: 'ஒரு தலித்தை முதல்வராக ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு தமிழகம் உட்பட பல மாநிலங்களில் இன்னும் சூழல் வரவில்லை' என்று திருமாவளவன் கூறிய கருத்தை நான் வரவேற்கிறேன். தமிழகத்தில் கக்கனுக்கு பிறகு தலித் ஒருவர் முக்கியமான அமைச்சர் பொறுப்புக்கு ஏன் வர முடியவில்லை என்பதை, ஆட்சி செய்பவர்களிடம் தான் கேட்க வேண்டும்.
டவுட் தனபாலு: அது சரி... உங்க கட்சியின் தேசிய தலைவராக மல்லிகார்ஜுன கார்கே என்ற தலித் தலைவர் தானே இருக்காரு... ஆனா, அவர் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்குறீங்களா... சோனியா, ராகுல், பிரியங்கா உத்தரவுப்படி நடக்கும் தலையாட்டி பொம்மையா தானே கார்கேவை வச்சிருக்கீங்க... நீங்க, திராவிட கட்சிகளை குறை சொல்வது சரியா என்ற, 'டவுட்' வருதே!
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா: மதுபான கொள்கை வழக்கில், 17 மாதங்கள் சிறையில் இருப்பேன் என்று நான் நினைக்கவில்லை. விசாரணையை நீட்டிக்கும் வகையில் என் மீது குற்றச்சாட்டு களை ஜோடித்தனர். சிறையில் என் மன உறுதியை உடைக்கும் முயற்சி நடந்தது. ஆனால், நான் வலுவாக இருந்தேன்.
டவுட் தனபாலு: அதானே... முன்னாடி எல்லாம் ஊழல் வழக்கில் கைதானால், ஒரே வாரத்தில் ஜாமினில் வந்துடலாம்... வழக்கு 20 - 25 வருஷம் நடக்கும்... அதுவரை பதவி சுகத்தையும் அனுபவிக்கலாம்... ஆனா, இப்ப காலம் மாறிடுச்சு... ஊழல்வாதிகளுக்கு உடனுக்குடன் தண்டனை நிச்சயம் என்பதில், 'டவுட்'டே இல்லை!
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: ஜாதியை ஒழிப்பது தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நோக்கம். அதில் நம்பிக்கை இருப்பவர்கள் மட்டும் என் பின்னால் வாருங்கள். ஜாதிய உள்நோக்கத்துடன் யாரும் என் பின்னால் வர வேண்டாம். தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் ஆட்சிக்கு வரும், போகும். ஆனால், எந்த காலத்திலும் ஒரு தலித் முதல்வராக முடியாது. அந்த சூழல் தான் இங்கு உள்ளது.
டவுட் தனபாலு: அப்படி என்றால், உங்களுக்கு முதல்வர் ஆகும் ஆசை இல்லையா... கடைசி வரை, திராவிட கட்சிகளின் நிழலியே காலத்தை ஓட்டிட்டு இருந்துடலாம் என்ற, 'துறவு' மனநிலைக்கு வந்துட்டீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!

