PUBLISHED ON : ஆக 18, 2024 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்: முதல்வர் ஸ்டாலின்,பழனியில் நடக்க உள்ள முத்தமிழ் முருகன் மாநாட்டில் பங்கேற்காதது ஏன். அனைத்து மதங்களுக்கும் பொதுவான ஆட்சி நடத்துவதாக சொல்லும்முதல்வர் ஸ்டாலின், அந்த வகையில் தான் நடந்து கொள்கிறார் என்றால், முருகன் மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும்.முருகன் மாநாடு, அ.தி.மு.க.,ஆட்சியின்போது நடந்திருந்தால், அதில் பொதுச்செயலர் பழனிசாமி கலந்துகொண்டு இருப்பார்.
டவுட் தனபாலு: பழனிசாமி பெயரிலேயே முருகன் குடிகொண்டிருப்பதால், அவர் கண்டிப்பா கலந்துக்குவாரு... இப்போதைக்கு எந்த தேர்தலும்இல்லாததால, திராவிட மாடல் ஆட்சியாளர்கள் முருகன் மாநாட்டில் பங்கேற்பது, 'டவுட்' தான்!
தமிழக முன்னாள் முதல்வர்பன்னீர்செல்வம்: ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடப்புத்தகங்கள் விலையை, தி.மு.க., அரசு உயர்த்தி உள்ளது. காகித விலை, அச்சிடும் கட்டணம் உயர்வு என, காரணம் தெரிவித்தாலும், 48 கோடி ரூபாய் செலவழித்து, கார் பந்தயம் நடத்தும் அரசுக்கு இது ஒன்றும் பெரிய விஷயமல்ல.
டவுட் தனபாலு: அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளுக்கு இலவசமாகத்தானே புத்தகங்களை தர்றாங்க... தனியார் பள்ளிகளில் லட்சங்களில் கட்டணம் கட்டி படிக்க வைக்கிற பெற்றோருக்கு இந்த கட்டண உயர்வு கடுமையாக தெரியாது எனக் கருதி, விலையை ஏத்தியிருக்காங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ்: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இலவச வழங்கப்படுகின்றன. தனியார் பள்ளிகளுக்கு விற்கப்படும் பாடநுால்கள் நியாயமான விலையில் விற்கப்படுகின்றன. 2018ஐ ஒப்பிடும்போது, காகித விலை 63 சதவீதம், மேல் அட்டை விலை 33 சதவீதம், அச்சுக்கூலி 21 சதவீதம் தற்போது உயர்ந்துள்ளது. அதற்கான செலவை ஈடுகட்டும் வகையில், ஆறாண்டுகளுக்குப் பின் பாடப் புத்தகங்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
டவுட் தனபாலு: தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணம் ஆண்டுக்காண்டு அதிகரித்தபடியே இருக்கு... புத்தகங்கள் விலையை ஏற்றிய நீங்க, அந்த கட்டண உயர்வுக்கும் கடிவாளம் போட்டால், 'டவுட்'டே இல்லாம உங்களை பாராட்டலாம்.