PUBLISHED ON : ஜன 18, 2025 12:00 AM

தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன்: பாலியல் வழக்கில் சென்னையில் அ.தி.மு.க., பிரமுகரும், மதுரையில் பா.ஜ., பிரமுகரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவை குறித்தெல்லாம் அண்ணாமலையும், பழனிசாமியும் பேசியிருக்க வேண்டும்; ஏன் பேவில்லை? காரணம், குற்றம் இழைத்தவர் தங்கள் கட்சியைச் சேர்ந்தவர் என்பது தான். இதில் இருந்தே, அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் கள்ளக் கூட்டணி அமைத்துள்ளதை தெரிந்து கொள்ளலாம்.
டவுட் தனபாலு: அவங்க கட்சியினரை கைது பண்ணியதை, அண்ணாமலையும், பழனிசாமியும் கண்டிக்கலையே... அப்புறமும் அதை பத்தி பேச என்ன இருக்கு...? நீங்க சொல்றதை பார்த்தா, 'பாலியல் குற்றவாளிகள் எல்லா கட்சிகளிலும் தான் இருக்காங்க... எங்க கட்சியை மட்டும் குறை சொல்லலாமா'ன்னு கேட்காம கேட்குறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!
இலங்கை அரசின் இணை அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்: இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில், இந்தியாவின் பங்கு இன்றியமையாதது. எங்கள் நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லவும், பொருளாதார வளர்ச்சிக்கும் உங்கள் பங்களிப்பு தேவை. இலங்கைக்கான கல்வி, விளையாட்டு குறித்த உதவிகளை, தமிழக அரசிடம் கோரியுள்ளோம்.
டவுட் தனபாலு: இலங்கைக்கு எவ்வளவோ உதவிகளை இந்தியா செய்திருக்கு... செய்யவும் காத்திருக்கு... ஆனாலும், தமிழக மீனவர்களை, ஏதோ பயங்கரவாதிகள் ரேஞ்சுக்கு கைது பண்ணி சிறையில் அடைப்பதும், அவங்க படகுகளை பறிமுதல் செய்வதையும் நிறுத்திட்டு, எங்களிடம் உதவி கேட்டால் என்ன என்ற, 'டவுட்' வருதே!
பத்திரிகை செய்தி: 'ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலை, முக்கிய கட்சிகளான அ.தி.மு.க., - பா.ஜ., புறக்கணித்துள்ளதால், அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் அடங்கிய பட்டாளங்கள் தொகுதியில் முகாமிட வேண்டாம்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டவுட் தனபாலு: அதுவும் சரிதான்... அடுத்த வருஷம் சட்டசபைக்கு பொது தேர்தல் வருது... எல்லா அமைச்சர்களையும் இப்பவே ஈரோட்டில் களமிறக்கி, அவங்க சக்தியையும், பல கோடி ரூபாயையும் வேஸ்ட் பண்ண வேண்டாம்னு முதல்வர் முடிவு பண்ணிட்டாரோ என்ற, 'டவுட்'தான் வருது!