PUBLISHED ON : மார் 23, 2024 12:00 AM

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்: நம் கட்சி வேட்பாளர்களின் மனுக்கள் 40 தொகுதிகளில் ஏற்கப்பட்டாலே, நாம் பாதி வென்று விட்டதாக அர்த்தம். எனவே, ஒவ்வொரு வேட்பாளரும் நான்கு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும். நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் சின்னம் தர முடியாது என்கின்றனர். செருப்பு சின்னமாவது கொடுங்கள். எங்கள் சின்னம் செருப்பு; ஓட்டு செலுத்த வேண்டியது உங்கள் பொறுப்பு என்று கூறி ஓட்டு கேட்போம்.
டவுட் தனபாலு: செருப்பு சின்னம் கொடுத்தாலும், அதை கையில துாக்கி ஓட்டு கேட்க முடியுமா... டென்ஷன் பார்ட்டியான நீங்க, அதை யார் மேலயாவது வீசிட்டா, ரசாபாசமாகிடுமே... அதை எல்லாம் யோசிச்சு தான், தேர்தல் அதிகாரிகள் சின்னம் ஒதுக்குவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
பா.ம.க., தலைவர் அன்புமணி: பா.ம.க.,வின் சாதனைகளை தன்னுடையதாக கூறி, அரசியல் பிழைப்பு நடத்தும் தி.மு.க.,வுக்கும், இன்னொரு உயிரினத்தை சார்ந்து, அதன் உணவை உறிஞ்சி வாழும் ஒட்டுண்ணிகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. செய்யாததை செய்ததாக போலி பெருமை பேசுவதற்கு, தி.மு.க., வெட்கப்பட வேண்டும்.
டவுட் தனபாலு: தி.மு.க., அணியில் சேர்வதற்காக, பல மாதங்களா அரசை விமர்சிக்காம அடக்கி வாசித்தவர், இப்ப பா.ஜ., அணிக்கு போனதும், 'புல் ஸ்பீடு'ல களம் இறங்கிட்டாரே... அவங்களும், பா.ம.க.,வின் கூட்டணி பல்டிகளை புட்டு புட்டு வச்சு பதிலடி தருவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி: அ.தி.மு.க.,வுக்கு நெருக்கடி என்ற பேச்சுக்கே இடமில்லை. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், அமலாக்கத் துறை சோதனை நடத்துவதை, நாங்கள் சட்டரீதியாக சந்திப்போம். ஏற்கனவே, லஞ்ச ஒழிப்பு துறை வழியே மாநில அரசு வழக்கு பதிவு செய்தது. மத்திய அரசு, வருமான வரித்துறை சோதனை நடத்தியது. தற்போது, அமலாக்கத் துறை சோதனை நடத்தி உள்ளது.
டவுட் தனபாலு: இப்ப நடக்கிற சோதனை எல்லாம் டிரெய்லர் தான்... மத்தியில மறுபடியும் பா.ஜ., ஆட்சி அமைந்த பிறகு தான், மெயின் பிக்சரே இருக்குது... மாநில அரசின் லஞ்ச ஒழிப்பு சோதனை எல்லாம், சாதாரண எறும்புக்கடி மாதிரி ஆகிடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!

