PUBLISHED ON : மார் 24, 2024 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை: 'அ.தி.மு.க., தரப்பு பா.ஜ.,வை எதிர்க்க ஆரம்பித்ததும், அக்கட்சியினர் மீது, அமலாக்கத் துறை சோதனை நடத்தப்படுகிறது' என, வைகோ கூறியிருப்பது, இன்னமும் பா.ஜ., உடன் அ.தி.மு.க., கள்ள உறவு வைத்திருக்கிறது என்று சொல்லி வரும் தி.மு.க., தலைவர்களுக்கு சரியான பதிலடி.
டவுட் தனபாலு: அடடா... அமலாக்கத் துறை சோதனை பற்றி, தி.மு.க., தரப்பே வாய்மூடி மவுனியாக இருக்கும்போது, வைகோ கொஞ்சம் உஷாராக இருந்திருக்க வேண்டாமா...? திருச்சியில அவரது மகன் துரை வைகோ ஜெயிக்கிற வரைக்கும், வைகோ மவுன விரதம் இருப்பது நல்லது என்பதில், 'டவுட்'டே இல்லை!
பத்திரிகை செய்தி: தமிழகஅரசின் டாஸ்மாக் நிறுவனம், ஏழு நிறுவனங்களிடம் இருந்து பீர்; 11 நிறுவனங்களிடம் இருந்து மது வகைகளை கொள்முதல் செய்கிறது. 'குடி'மகன்களின் கோரிக்கையை ஏற்று, கூடுதலாக, 15 பிராண்டில் புதிய மது வகைகளை அறிமுகம் செய்ய டாஸ்மாக் முடிவு செய்துள்ளது. இதன்படி, சாதாரண வகை பிரிவில், 'வீரன்' என்ற புதிய வகை மது, 'குவார்ட்டர்'பாட்டிலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை, 140 ரூபாய்.
டவுட் தனபாலு: எந்த, 'குடி'மகன், இவங்களிடம் எங்களுக்கு புது பிராண்ட்கள் வேணும்னு கேட்டாங்களாம்... சாராய ஆலை முதலாளிகள், கொழுத்த லாபம் சம்பாதிக்கவும், தேர்தல் செலவுக்கு அரசியல் கட்சிகளுக்கு அள்ளி கொடுக்கவுமே, புது புது பெயர்கள்ல சாராயத்தை அறிமுகப்படுத்தி, குடிக்கிறவங்க குடலை எரிக்கிறாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக முதல்வர் ஸ்டாலின்: பா.ஜ., ஆட்சியாளர்கள் பொய்கள் சொல்வதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருக்கின்றனர். பிரதமர், மத்திய அமைச்சர்கள், இணை அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் என, அத்தனை பேருமே பொய்யை மட்டுமே பிரசாரமாக மேற்கொள்கின்றனர்.
டவுட் தனபாலு: உண்மை மட்டுமே பேசும் திராவிட மாடல் ஆட்சியாளர்கள், அவங்களது பொய்களை அம்பலப்படுத்தலாமே... ஆனா, சட்டசபை தேர்தல்ல தந்த வாக்குறுதிகளை மறந்துட்டு, லோக்சபா தேர்தலுக்கு தி.மு.க., தந்திருக்கிற வாக்குறுதிகளை உண்மைன்னு தமிழக மக்கள் நம்புவாங்களா என்பது, 'டவுட்'தான்!

