PUBLISHED ON : ஏப் 01, 2024 12:00 AM

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்: நாடு காக்க கட்சி வரைகோடுகளை அழித்து விட்டு, மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள் இங்கு வந்துள்ளனர். எல்லா கட்சி வேறுபாடுகளையும் மறந்து, லோக்சபாவில் உங்கள் குரல் ஒலிக்க நான் வந்துள்ளேன். தேர்தலில் போட்டியிடாமல் தியாகம் செய்து விட்டீர்களே என்று என்னிடம் கேட்கின்றனர். இது தியாகம் அல்ல, தமிழகம் காக்கும் வியூகம்.
டவுட் தனபாலு: 'நோகாம நொங்கு திங்குறது'ன்னு கிராமங்கள்ல ஒரு சொலவடை உண்டு... அந்த மாதிரி, அடுத்த வருஷம் ராஜ்யசபா என்ற பின்வாசல் வழியா, பைசா செலவில்லாம பார்லிமென்ட்டுக்குள்ள நுழைய, 'துண்டு' போட்டு வச்சுட்டு வியூகம், தியாகம்னு ஜல்லியடிக்கணுமா என்ற, 'டவுட்'தான் வருது!
தமிழக முதல்வர் ஸ்டாலின்: நேற்று முன்தினம் மாலை செய்தி, தாய்மொழியாக தமிழ் வாய்க்கவில்லை என வருந்துகிறார் பிரதமர் மோடி. நேற்று காலை செய்தி, அழகிய தமிழ்ச்சொல், 'வானொலி' இருக்க, ஆகாசவாணி என்பதே பயன்பாட்டுக்கு வரும். ஒரு பக்கம் கண்ணை குத்திக் கொண்டே, மறுபக்கம் கண்ணீர் வடிப்பது என்ன மாதிரியான தமிழ்ப் பாசம். கடந்த காலங்களில், தமிழகத்தில் ஆங்கிலத்தில் பரப்புரை செய்த மோடி, இப்போது ஹிந்தியில் மட்டுமே பேசுவதன் மர்மம் என்ன.
டவுட் தனபாலு: சில மாதங்களுக்கு முன்பு, 'இண்டியா' கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் நீங்களும், டி.ஆர்.பாலுவும் கலந்துக்கிட்டப்ப, 'ஹிந்தி கத்துக்கிட்டு வாங்க'ன்னு நிதீஷ்குமார் கடுப்படிச்சாரே... அவரிடம் எதுவும் பேசாம, பிரதமரை மட்டும் வம்புக்கு இழுப்பது முறையா என்ற, 'டவுட்' வருதே!
கிராமத்து பெண்களிடம், தர்மபுரி பா.ம.க., வேட்பாளர் சவுமியா அன்புமணி: என்னை பற்றி யு டியூப், வீடியோ பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். பெண்கள் உரிமைக்காக பேசிய வீடியோக்கள் நிறைய உள்ளன. சாமி கும்பிடுவதை பற்றி அதில் சொல்லி இருக்கிறேன்.
டவுட் தனபாலு: சரியா போச்சு... காடு, கழினிக்கு வேலைக்கு போயிட்டு வர்ற கிராமத்து பெண்களிடம் போய், சோஷியல் மீடியாக்கள்ல என்னை தேடி பாருங்கன்னு சொன்னா, அவங்க என்ன செய்வாங்க... உங்க அப்பா, அண்ணன், மாமனார், கணவர் எல்லாம் அரசியல்ல பிரபலமா இருக்கிறது உங்களுக்கு எந்த வகையிலும் அனுகூலமா இல்லையோ என்ற, 'டவுட்'தான் வருது!

