PUBLISHED ON : ஏப் 02, 2024 12:00 AM

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: சமூக நீதி வரலாற்றில், காங்கிரசுக்கு எந்த இடமும் கிடையாது. ஓ.பி.சி.,க்கு இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பான காகா கலேல்கர் ஆணையத்தின் அறிக்கையை செயல்படுத்தாமல், அன்றைய பிரதமர் நேரு குப்பை தொட்டியில் வீசி எறிந்தார். ஜனதா கட்சி ஆட்சியில் அமைக்கப்பட்ட மண்டல் ஆணைய அறிக்கையை காங்கிரஸ் அரசு செயல்படுத்தவில்லை.
டவுட் தனபாலு: சமூக நீதியை மதிக்காத காங்., தலைமையிலான ஐ.மு., கூட்டணியில, 2004ல் ஏன் சேர்ந்தீங்க... அப்ப, மத்தியில் காங்., தலைமையில் அமைந்த அரசில், உங்க மகன் அன்புமணியை ஏன் அமைச்சராக்குனீங்க என பல, 'டவுட்'கள் கிளம்புதே!
ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ். ஷர்மிளா: மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு ஏழை குடும்பத்துக்கும் மாதந்தோறும் 8,500 ரூபாய் வழங்கப்படும். மகிளா மகாலட்சுமி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மட்டுமே வழங்கப்படும் இந்த தொகையால், ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் கிடைக்கும். 5 லட்சம் ரூபாய் வரையிலான விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப் படும். சமூக பாதுகாப்பு ஓய்வூதியமாக 4,000 ரூபாயும், மாற்றுத்திறனாளிகளுக்கு 6,000 ரூபாயும் மாதந்தோறும் வழங்கப்படும்.
டவுட் தனபாலு: தேர்தல்ல ஜெயிச்சா தான், இதை எல்லாம் செய்யணும்னு நினைச்சு வாக்குறுதிகளை வாரி வீசுறீங்களா அல்லது உங்க கூட்டணி பார்ட்னரான தி.மு.க., மாதிரி, ஜெயிச்சதும் மக்களுக்கு, 'அல்வா' தந்துடலாம்னு நினைச்சு அடிச்சு விடுறீங்களா என்ற, 'டவுட்'தான் வருது!
பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன்: ஆம் அத்மி கட்சி தலைவரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் சிறைக்கு சென்றுள்ளதால், அவரது மனைவி முதல்வராக தயாராகி வருகிறார். அதாவது, தி.மு.க.,வை பின்பற்றி ஊழல் செய்த கெஜ்ரிவால், அடுத்து குடும்ப ஆட்சிக்கும் தயாராகி விட்டார்.
டவுட் தனபாலு: அது சரி... அரவிந்த் கெஜ்ரிவாலுடன் தி.மு.க., சேர்ந்தப்ப, அவர் கட்சி மாதிரியே இவங்க கட்சியும் மாறும்னு பலரும் நினைச்சாங்க... கடைசியில், கெஜ்ரிவாலை தங்களது பாணிக்கு மாற்றிய பெருமையை தி.மு.க., தட்டிட்டு போயிடுச்சு என்பதில், 'டவுட்'டே இல்லை!

