PUBLISHED ON : ஏப் 03, 2024 12:00 AM

நடிகர் விஜயின் தந்தை சந்திரசேகர்: தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலர் புஸ்ஸி ஆனந்த், ஒரு சமூக வலைதள பக்கத்தை வைத்துள்ளார். இதில், விஜய் உட்பட 50 பேர் உள்ளனர்.அதில், கட்சிக்காக புஸ்ஸி ஆனந்த் கஷ்டப்படுவது போன்ற பதிவுகள் போடப் படுகின்றன; அதை பலரும்,'லைக்' செய்கின்றனர். இதை பார்த்து, புஸ்ஸி ஆனந்த் கடுமையாக உழைப்பதாக விஜய் நம்பிக் கொண்டிருக்கிறார். விஜயை ஏமாற்றுகின்றனர்.
டவுட் தனபாலு: உங்க மகன் கட்சி ஆரம்பிக்கணும்னு துடியா துடிச்சவர் நீங்க தான்... ஆனா, அவர் கட்சி துவங்கியதும், உங்களை கழற்றி விட்ட விரக்தியில, இப்படி குத்தம், குறை கண்டுபிடிக்குறீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார்: ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தென்மாவட்டங்களில் மதுரை - துாத்துக்குடி தொழில் வழித்தடம் கொண்டு வந்தார். உலக முதலீட்டாளர் மாநாடுகளில் தென்மாவட்டங்களில் தொழில் துவங்க முன்னுரிமை அளித்தார். மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் உட்பட ஒன்பது மாவட்டங்களை ஒரு மண்டலமாக உருவாக்கி, அதில் தொழில் துவங்குவோருக்கு பல்வேறு சலுகைகள் அளித்தார்.
டவுட் தனபாலு: ஜெ., காலமாகி ஏழு வருஷங்கள் ஓடிடுச்சு... அவங்க காலத்துல, தென் மாவட்டங்களுக்கு இவ்வளவு செஞ்சிருந்தாங்க என்றால், இன்னிக்கு அந்த மாவட்டங்கள் எல்லாம் தொழில் வளர்ச்சியில முன்ன ணிக்கு வந்திருக்கணுமே... நீங்க சொல்ற திட்டங்கள் எல்லாம், இன்று வரை ஏட்டளவில் தான் இருக்கு என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது காங்கிரசும், தி.மு.க.,வும் சேர்ந்து செய்த சதி. எனவே, கச்சத் தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளோம். கச்சத் தீவை மீட்கும் விவகாரத்தில் இந்திய அரசு நல்ல முடிவு எடுக்கும். கச்சத் தீவு மீட்பு பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறும்.
டவுட் தனபாலு: கச்சத்தீவை கொடுத்து, காங்., - தி.மு.க., கட்சிகள் தப்பு பண்ணியிருக்கலாம்... ஆனா, 10 வருஷமா மத்தியில, 'பவர்புல்'லா ஆட்சியில இருந்தப்ப, கச்சத்தீவு மீட்புக்கு ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்கலாமே... அதை விட்டுட்டு, இப்ப கச்சத்தீவு பற்றி முழங்குவது, தேர்தலுக்காக தானோ என்ற, 'டவுட்'களை கிளப்புதே!

