PUBLISHED ON : ஏப் 05, 2024 12:00 AM

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலர் ஈஸ்வரன்: தமிழக முதல்வர், அரசு பஸ்களை பெண்களுக்கு கிரயம் செய்து கொடுத்து விட்டார். ஆனால், ஆண்களுக்கு இலவச பயணம் இல்லை. முதல்வரிடம் தெரிவித்து ஆண்களுக்கும் இலவசம்னு அறிவிக்க சொல்லணும். ஆண்கள் ரொம்ப நாள் பொறுத்துக் கொள்ள மாட்டோம். சங்கம் அமைத்து விட்டோம். ஆண்களும் சேலை கட்டிட்டு, பஸ்சில் இலவசமாக பயணிக்க போறோம்.
டவுட் தனபாலு: உங்க பேச்சை கேட்டு, அரசு பஸ்கள்ல, 'ஓசி' பயணத்துக்கு ஆசைப்பட்டு, சேலை கட்டி ஏறினா, ஆண்கள் போய் சேருமிடம் போலீஸ் நிலையமா தான் இருக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி: கச்சத்தீவை மீட்க போராடியவர் ஜெயலலிதா. இன்றைக்கு பா.ஜ., தலைவர்கள் கச்சத்தீவு குறித்து பேசுகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக இதை கிடப்பில்போட்டுவிட்டு, ஜெயலலிதாவின் தொடர்ச்சியான கோரிக் கைகளுக்கு செவி சாய்க்காமல், தற்போது தேர்தல் ஆதாயத்திற்காக பேசுகின்றனர். கச்சத்தீவுக்காக உண்மையிலேயே போராடிய ஒரே கட்சி அ.தி.மு.க., தான்.
டவுட் தனபாலு: கச்சத்தீவுக்காக போராடியது ஜெயலலிதா, அ.தி.மு.க.,ன்னு சொல்றீங்களே... நாலு வருஷமா முதல்வரா இருந்த நீங்க, அந்த தீவை மீட்க ஒரு துரும்பையாவது கிள்ளி போட்டீங்களா என்ற, 'டவுட்' வருதே!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்: நாங்கள் ஆட்சிக்கு வந்தால், 500 ஏக்கரில் நாட்டுக்கோழி பண்ணை வைத்து தினமும் இரண்டு முட்டை, அரை லிட்டர் பால் குடித்துவிட்டு மாணவர்கள் பள்ளிக்கூடம் செல்வர். அனைவருமே பயில்வான் மாதிரி வருவர். இந்தியாவுக்கு ஒரு கிரிக்கெட் அணி இருக்கட்டும். நான் தனிப்பட்ட முறையில் தமிழகத்துக்கு ஒரு கிரிக்கெட் அணி தயார் செய்கிறேன். இரண்டுக்கும் போட்டி வைத்தால், என் வீரர்கள் ஒவ்வொரு பந்திலும் சிக்ஸர் அடிப்பர்.
டவுட் தனபாலு: 'ஆடு மேய்ப்பதை அரசு வேலை ஆக்குவோம்'னு சொன்னீங்க... ஆடு மேய்க்கிறவங்க உங்களுக்கு ஓட்டு போட்டிருந்தா கூட, சில தொகுதிகள்ல ஜெயிச்சிருக்கலாம்... இப்ப, பள்ளிக்கூட பசங்களை பயில்வான் ஆக்குவோம்னு சொல்றீங்க... அரசியல்ல ஒரு வடிவேலுவா வலம் வர்றீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!

