PUBLISHED ON : ஏப் 06, 2024 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சின்னையா: கடந்த லோக்சபா தேர்தலில், நாங்கள்தோல்வி அடைய காரணம் பா.ஜ., கூட்டணியே. தாம்பரம் பகுதியில் ஓட்டு சேகரிக்க சென்றபோது, சர்ச் மற்றும் மசூதியில் எங்களை உள்ளே வர வேண்டாம் என்றனர். அது அ.தி.மு.க.,வினர் மீது உள்ள கோபம் அல்ல; பா.ஜ., மீது இருந்த கோபம்.
டவுட் தனபாலு: அது சரி... இப்பதான் பா.ஜ., கூட்டணியில் இருந்து வெளியில வந்துட்டீங்களே... இந்த தேர்தல் முடிவுகள்ல, 40க்கு 40 தொகுதிகள்லயும் நீங்க ஜெயிச்சு காட்டலைன்னா, பா.ஜ., மீது தப்பில்லைன்னு, 'டவுட்' இல்லாம ஒப்புக்குவீங்களா?
காங்., மூத்த தலைவர் சிதம்பரம்: இந்த தேர்தலில், தமிழகத்தில் மட்டும் வெற்றி பெற்றால் போதாது. மத்திய அரசில் மாற்றம் ஏற்படா விட்டால், அடுத்த தேர்தல் நடக்குமா என்பது கேள்விக்குறி. கடந்த 10 ஆண்டுகளில் மோடி தந்த வாக்குறுதிகளில், எதை நிறைவேற்றினார் என்ற கேள்விக்கு பா.ஜ., பதில் கூறுவதில்லை.
டவுட் தனபாலு: மோடி தந்த வாக்குறுதிகளில் எதையும் நிறைவேற்றவில்லை என்று சொல்றீங்களே... 'காங்கிரஸ் ப்ரீ இந்தியா' என ஒரு வாக்குறுதி தந்தாரே... அதில், 75 சதவீதத்தை நிறைவேற்றி விட்டார்... இந்த லோக்சபா தேர்தல் முடிவில், 100 சதவீதத்தையும் நிறைவேற்றி விடுவார் என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு: தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதும் குற்றம்; வாங்குவதும் குற்றம். ஓட்டுக்கு பணம் கொடுப்போர் மீதும், வாங்குவோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
டவுட் தனபாலு: ஆட்டு வியாபாரி, கோழி வியாபாரிகள் 50,100 ரூபாய் எடுத்துட்டு போனாலே, கபால்னு பாய்ஞ்சு பிடிச்சுடுறீங்க... பல நுாறு கோடிகளை அரசியல்வாதிகள் தமிழகம் முழுக்க எடுத்துட்டுபோய், கடைசி நேர பட்டு வாடாவுக்காக பதுக்கிட்டுதான் இருக்காங்க... உங்க நடவடிக்கை எல்லாம் பேச்சளவில் தான் இருக்குது என்பதில், 'டவுட்'டே இல்லை!

