PUBLISHED ON : ஜன 03, 2026 01:29 AM

திராவிட வெற்றிக் கழகம் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மல்லை சத்யா அறிக்கை:
கடந்த, 2025ம் ஆண்டு, என் வாழ்வில் மறக்க முடியாத மிக மோசமான ஆண்டாகவும், மகிழ்ச்சிகரமான உன்னதமான ஆண்டாகவும் இருந்தது. நான் வீழ்வேன் என நினைத்தவர்கள், நாங்கள் எதிர்த்து நிற்போம் என, கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். அவர்கள் போட்ட கணக்கு தவறு என்பதை காலம் நிரூபித்துக் கொண்டு வருகிறது. தமிழகத்தின் தலைவிதியை தீர்மானிக்கும் சட்டசபை தேர்தல் களத்தில், வெற்றி கூட்டணியில் இடம் பெறுவோம்.
இவர் கட்சிக்கும், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கும் பெயர் பொருத்தம் அமோகமா இருப்பதால், அந்த கூட்டணிக்கே இவர் போகலாமே!
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிக்கை:
தி.மு.க., ஆட்சியில் எடுத்த கடும் நடவடிக்கைகளின் மூலம், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டம் இல்லாத மாநிலமாக, தமிழகம் மாறியிருப்பதாக, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நடப்பாண்டில் சென்னை மண்டலத்தில் மட்டும், 2,300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக, மத்திய போதை பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. ஆனால் அமைச்சர் கூறும் தகவல், முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதாக அமைந்துள்ளது.
ஊடகங்களில் வரும் செய்திகளை அமைச்சர் சுப்பிரமணியன் பார்ப்பதும், படிப்பதும் இல்லை போலும்!
அகில இந்திய காங்., முன்னாள் செய்தி தொடர்பாளர் எஸ்.வி.ரமணி பேட்டி:
தமிழக அரசியலில், விஜய் என்ற பெரிய உந்துதல் சக்தி வந்துள்ளதால், இனி அ.தி.மு.க., - தி.மு.க., என்பதெல்லாம் இருக்காது. விஜய் பின்னால், எம்.ஜி.ஆருக்கு வந்தது போல் உணர்ச்சிப்பூர்வமான மக்கள் வருகின்றனர். அவர்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர். மதச்சார்பின்மை கொள்கையை விஜய் பின்பற்றுகிறார். சமூக நீதியை பாதுகாக்க விரும்புகிறார். த.வெ.க.,வில் அரசியல் நிர்வாகம் பலம் அடையும் போது, வெற்றி கிடைக்கும்.
விஜய் கட்சியின் பொதுச்செயலர் ஆனந்த் கூட, இவர் அளவுக்கு விஜயை புகழந்திருக்க மாட்டார்!
தமிழக காங்., கலைப்பிரிவு தலைவரும், நடிகர் சிவாஜி கணேசன் சமூக நலப்பேரவை தலைவருமான சந்திரசேகரன் அறிக்கை:
சிவாஜி, தன் இறுதிக்காலம் வரை, சென்னை தி.நகர் இல்லத்தில் தான் வாழ்ந்து மறைந்தார். அவர் வசித்த வீட்டின் அருகில், தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை கட்டப்பட்டு, விரைவில் திறக்க இருக்கும் உயர்மட்ட மேம்பாலத்திற்கு சிவாஜி பெயரை முதல்வர் ஸ்டாலின் சூட்டி, அவரை போற்ற வேண்டும்.

