PUBLISHED ON : ஜன 04, 2026 02:54 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை பேட்டி: மத்திய அரசுடன், மாநில அரசு மோதல் போக்கை கடைப்பிடிப்பது, மாநில வளர்ச்சிக்கு நல்லதல்ல. 'மத்திய அரசுக்கு தமிழகம் என்றுமே, 'அவுட் ஆப் கன்ட்ரோல்' தான்' என, தி.மு.க.,வினர் பேசுவது ஆபத்தானது. விமான பயணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால், விமானி, கீழே உள்ள கட்டுப்பாட்டு அறையுடன், தொடர்பிலேயே இருக்க வேண்டும். ஒருவேளை தொடர்பு துண்டிக்கப்படுமானால், ஆபத்து கட்டுப்பாட்டு அறைக்கு அல்ல; விமானத்திற்கு தான் என்பதை புரிந்து கொள்வது நல்லது. இதை கேட்டால், 'மத்திய பா.ஜ., அரசுக்கு அடிமை சாசனம் எழுதி கொடுக்க சொல்றீங்களா'ன்னு, தி.மு.க.,வினர் விதண்டாவாதம் தான் பண்ணுவாங்க!
அ.தி.மு.க., மருத்துவ அணி மாநில இணை செயலர், டாக்டர் சரவணன் அறிக்கை: 'கடந்த, 2021 சட்டசபை தேர்தல் சமயத்தில், தி.மு.க., அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை' எனக் கூறி, தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் போராட்டங்கள் வெடித்து வருகின்றன. போராட்டக்காரர்கள் மீது, காவல் துறை மூலம் அடக்குமுறையை கட்டவிழ்த்து விடும் சர்வாதிகார ஆட்சியாக, தி.மு.க., அரசு உள்ளது. வாக்கு தவறிய தி.மு.க.,வுக்கு தங்கள் வாக்குகள் கிடையாது என்ற உறுதியுடன் தமிழக மக்கள் உள்ளனர். வரும் சட்டசபை தேர்தலில் குடும்ப, சர்வாதிகார ஆட்சிக்கு முடிவுரை எழுதி, பழனிசாமி தலைமையில், அ.தி.மு.க.,வின் ஜனநாயக ஆட்சி மலரும்.
ஆனா, அ.தி.மு.க., பொதுச் செயலர், வெற்றி வாய்ப்பு தரக்கூடியவங்களை கிட்டவே சேர்க்காம இருக்கறப்ப எப்படி வெற்றி கிடைக்கும்? தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர், நாராயணன் திருப்பதி அறிக்கை: சென்னை, சைதாப்பேட்டையில் சமீபத்தில், விற்பனைக்காக போதை பொருள் வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர். இருவரில் ஒருவர், பெண் போலீசின் கணவர்; மற்றொருவர், மருத்துவ கல்லுாரி நான்காம் ஆண்டு மாணவர் என்பது, அதிர்ச்சி அளிக்கிறது. போதை பொருள் புழக்கம், சமுதாயத்தில் அனைத்து மட்டங்களிலும் ஊடுருவியுள்ளதை, இவர்களின் கைது உறுதி செய்கிறது.
ஆனா, 'பெண் போலீசின் கணவரையே கைது பண்ணி, போதை பொருள் விற்பனையை தடுத்துட்டோம் பார்த்தீங்களா'ன்னு தான் தி.மு.க.,வினர் மார்தட்டிக்குவாங்க! அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர், செல்லுார் ராஜு பேட்டி: சினிமா கவர்ச்சிக்கு எப்போதுமே கூட்டம் வரும். அதுபோல், நடிகர் விஜய்க்கும் வருகிறது. நடிகர் அமிதாப்பச்சன் வந்தால் கூட கூட்டம் வரும். ஆனால், தங்களை யார் ஆள வேண்டும் என்பதை மக்கள் தான் தீர்மா னிக்க வேண்டும்.
உண்மை தான்... நடிகர்களை பார்க்க கூடிய கூட்டமெல்லாம் ஓட்டுகளா மாறியிருந்தால்,நடிகர் ராமராஜன் எப்பவோ முதல்வராகியிருப்பாரே!

