PUBLISHED ON : ஜன 02, 2026 02:16 AM

அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை:
திருத்தணியில், வடமாநில இளைஞர் ஒருவரை, 17 வயதுள்ள போதை சிறுவர்கள், அரிவாளால் வெட்டி, 'ரீல்ஸ்' வீடியோ வெளியிட்டதை பார்க்கும்போது, நாம் தமிழகத்தில்தான் வாழ்கிறோமா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. இந்த துணிச்சல் எப்படி வந்தது? அரசின் மீதோ, காவல் துறை மீதோ, எந்த பயமும் இல்லாமல் உள்ளனர் என்பதை எண்ணி, தி.மு.க., ஆட்சியாளர்கள் வெட்கி தலைகுனிய வேண்டும்.
கஞ்சா போதையில் தான், இந்த கொடூரத்தை சிறுவர்கள் செஞ்சிருக்காங்க... ஆனா, போலீஸ் அதிகாரி அஸ்ரா கர்க், 'அந்த சிறுவர்கள் ஏதோ ஒரு போதையில் இருந்தனர்' என்றல்லவா பூசி மெழுகுறாரு!
தி.மு.க., செய்தி தொடர்புக்குழு துணை தலைவர் மருது அழகுராஜ் அறிக்கை: சசிகலா காலில் விழுந்து, கை மாத்தா வாங்குன கட்சியின் மீது, 'அதிபர் எடப்பாடி' என, ஸ்டிக்கர் ஒட்டியவர்தான் பழனிசாமி. அவர் பேரு மட்டும் வச்சிப்புட்டு, சோறு வைக்காம, கம்பி நீட்டுன பல திட்டங்களுக்கும் சேர்த்தே, உயிர் கொடுத்தது முதல்வர் ஸ்டாலின் தான். அதுக்கு பேரு ஸ்டிக்கர்ஒட்டுறது கிடையாது; அது வன்மம் இல்லாத பொறுப்புணர்வு.
திட்டங்கள் எல்லாமே, மக்கள் கட்டிய வரிப்பணத்தில் தான் வந்தது என்பதை இவர் மறந்துட்டாரோ?
தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு: கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கழுகூரில், அதீத மது போதையில் இளைஞர் ஒருவர், 7 வயது சிறுமியை துாக்கி சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக வெளியான செய்தி பதற வைக்கிறது. 'டாஸ்மாக் மாடல்' அரசின் கீழ் போதையின் பிடியில் சிக்கியுள்ள தமிழகத்தில், பெண்களுக்கு எதிரான வன்முறை குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன.
'தமிழகத்தில், தே.ஜ., கூட்டணி ஆட்சிக்கு வந்தால், பூரண மதுவிலக்கு அமலுக்கு வரும்' என, இவரால் துணிச்சலாக அறிவிக்க முடியுமா?
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, அரசுக்கு பரிந்துரைப்பதற்காக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையில் அமைக்கப்பட்ட குழு, 11 மாதங்களுக்கு பின், முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அரசு ஊழியர்கள், வரும் 6ம் தேதி போராட்டம் அறிவித்துள்ள நிலையில், அவர்களுக்கு ஆசை காட்டி, போராட்டத்தை கைவிட செய்வதற்கான ஏமாற்று வேலைதான் இது. 6ம் தேதிக்கு முன்பாக, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தும் அறிவிப்பை, தி.மு.க., அரசு வெளியிட வேண்டும்.
ஒருவேளை பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிச்சிட்டா, 'நான் சொல்லிதான் அறிவிச்சாங்க'ன்னு இவர் பெருமை அடிச்சுக்குவாரே!

