PUBLISHED ON : ஏப் 09, 2024 12:00 AM

பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த நடிகர் செந்தில்: இந்த தேர்தலோடு பழனிசாமியை முடிச்சிடுங்க. அதன் பிறகு நம்ம மோடி தான். ஜெயலலிதாவும், எம்.ஜி.ஆரும் டைட்டானிக் கப்பல் போல் கட்சியை வைத்திருந்தனர். அந்த கப்பலை ஓட்ட தெரியாமல் ஓட்டி உடைத்து விட்டார் பழனிசாமி. அ.தி.மு.க., நாசமாக போய் விட்டது, எனக்கு வருத்தமாக உள்ளது.
டவுட் தனபாலு: சினிமாவுல தான், கவுண்டமணியிடம் அடி வாங்குற அப்பாவி காமெடியனா இருப்பீங்க போல... அரசியல் களத்துல, பொளந்து கட்டுறீங்களே... பா.ஜ.,வில் உங்களுக்கு உரிய கவுரவம் தருவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக முதல்வர் ஸ்டாலின்: புதுச்சேரி உள்துறை அமைச்சராக சும்மா உட்கார்ந்திருந்த நமச்சிவாயத்தை பா.ஜ., சார்பில் தேர்தலில் நிறுத்தியுள்ளனர். நமச்சிவாயம் எத்தனை கட்சி மாறியுள்ளார் என கணக்கு போட்டு பார்த்தால், எனக்கே தலை சுற்றுகிறது. தி.மு.க.,வில் இருந்தவர், ம.தி.மு.க., சென்றார். அங்கிருந்து த.மா.கா.,விற்கு தாவினார். பின், புதுச்சேரி மாநில காங்கிரசுக்கு தாவினார். அங்கிருந்து மீண்டும் த.மா.கா., வந்தார். பின்னர் காங்கிரசுக்கு தாவினார். காங்கிரசிலிருந்து தற்போது பா.ஜ.,வுக்கு இடம் பெயர்ந்துள்ளார்.
டவுட் தனபாலு: உங்க கட்சியின் செந்தில் பாலாஜி கூட ஆரம்பத்துல தி.மு.க.,வுல தான் இருந்தார்... அப்புறமா ம.தி.மு.க.,வுக்கு போனாரு, அங்க இருந்து அ.தி.மு.க.,வுக்கு போய், பிறகு அ.ம.மு.க.,வுக்கு போயிட்டு, உலகம் ஒரு உருண்டை என்பது போல, கடைசியா உங்ககிட்டயே வந்து சேரலையா... இதுல, நமச்சிவாயத்தை மட்டும் குறை சொல்வது சரியா என்ற, 'டவுட்' வருதே!
அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி: லோக்சபா தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், தபால் ஓட்டளிக்கும் முன், தி.மு.க., ஆட்சியாளர்களின் பசப்பு வார்த்தைகளை, ஒரு கணம் எண்ணிப் பார்த்து, தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். முதல்வரின் தொடர் நாடகத்திற்கு, அறிவார்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மயங்க மாட்டார்கள். இதற்கானதக்க பாடத்தை, வரும் லோக்சபா தேர்தலில் புகட்டுவர்.
டவுட் தனபாலு: 'அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு போட்டால் தான், அரசு ஊழியர்கள் அறிவார்ந்தவங்க இல்லன்னா அறிவில்லாதவங்க'ன்னு சொல்றீங்களோன்னு, 'டவுட்' எழுதே!

