PUBLISHED ON : ஏப் 20, 2024 12:00 AM

மதுரா தொகுதி பா.ஜ., - எம்.பி., ஹேமமாலினி: பெயருக்காகவோ அல்லது புகழுக்காகவோ நான் அரசியலில் சேரவில்லை. எனக்கு எந்த பதவி மீதும் ஆசை இல்லை. மக்களுக்கு சேவை செய்யவே அரசியலுக்கு வந்தேன். அதற்கு வாய்ப்பை வழங்கிய பிரதமர் மோடிக்கு நன்றி.
டவுட் தனபாலு: தங்களுக்கு 75 வயதாகி விட்டது... பொதுவாக, இது அரசியலில் ஓய்வு பெறும் வயது... மக்களுக்கு சேவை செய்ய எத்தனையோ வழிகள் இருக்குதே... அதனால, எனக்கு மதுரா தொகுதியில் மீண்டும் சீட் வேண்டாம்னு விலகி, இளைய சமுதாயத்துக்கு வழி விட்டிருந்தா, 'டவுட்'டே இல்லாம தங்களை பாராட்டியிருக்கலாம்!
காங்., - எம்.பி., ராகுல்: எங்கள் கட்சியின் முதுகெலும்பு, தொண்டர்களாகிய நீங்கள் தான். தேர்தல் நேரம் என்பதால் உங்களிடம் நேரடியாக பேச வேண்டும் என நினைத்தேன். இது சாதாரண தேர்தல் அல்ல; அரசியல் சாசனத்தையும், ஜனநாயகத்தையும் காப்பாற்றும் தேர்தல். இதில், சிங்க உள்ளம் உடைய உங்களை போன்றவர்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. நாங்கள் உங்களை நம்பியுள்ளோம். உங்களை நேசிக்கிறோம். உங்களுக்கு என் வாழ்த்துகள்.
டவுட் தனபாலு: தேர்தல் பணிகளில் மட்டும் தான் தொண்டர்களுக்கு பொறுப்பு எல்லாம் தருவீங்க... ஜெயித்து விட்டால், தலைவர்கள் தான் முக்கிய பதவிகளை அலங்கரிப்பாங்க... தொண்டர்கள் வழக்கம்போல தெருக்கோடியில் தான் நிற்கணும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
பத்திரிகை செய்தி: 'டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சிறையில் மாம்பழங்கள், இனிப்புகள் சாப்பிடுவதால், அவரது சர்க்கரை அளவு உயர்கிறது. இதை காரணம் காட்டி ஜாமின் பெற அவர் முயற்சிக்கிறார்' என, சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை முறையிட்டுள்ளது.
டவுட் தனபாலு: அடடா... ஜாமின் கேட்டு போராடி பார்த்து, கடைசியா இப்படி களம் இறங்கிட்டாரா... அந்த வகையில, குறுக்கு வழியில ஜாமின் வாங்க முயற்சிக்காம, ஜெயில்லயே இருக்கிற நம்ம ஊர் செந்தில் பாலாஜியை, 'டவுட்'டே இல்லாம பாராட்டலாம்!

