PUBLISHED ON : ஏப் 24, 2024 12:00 AM

மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த, கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி: 'நாங்கள் மத்தியில் ஆட்சிக்கு வந்தால், இலவசங்களை வாரி வழங்குவோம்' எனக் கூறி, காங்கிரஸ் சார்பில் கர்நாடகா முழுதும் உத்தரவாத அட்டை, வாக்காளர்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. இதை, தேர்தல் கமிஷன் தடுத்து நிறுத்த வேண்டும்.
டவுட் தனபாலு: இந்த மாதிரி உத்தரவாத அட்டைகளை, 2023 சட்டசபை தேர்தல்ல வழங்கி தான், காங்., அங்க ஆட்சியை பிடிச்சது... சொன்ன மாதிரி, வாக்குறுதிகளை நிறைவேற்றியும் காட்டிட்டாங்க... அதனால, இந்த முறையும் காத்து அவங்க பக்கம் திரும்பிட கூடாதுன்னு நீங்க பதறுவது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: தமிழகத்தில் கஞ்சா புழக்கத்தால், தினம் தினம் குற்ற செயல்கள் கட்டுப்பாடின்றி அதிகரித்து வருகின்றன. சென்னையில் கஞ்சா வியாபாரிகள் போலீசாரை தாக்கியது, தஞ்சை, கும்பகோணம் அருகே இளைஞர்கள் கஞ்சா போதையில், அரசு பஸ் டிரைவரை தாக்கிய செய்திகள் வெளியாகின. தமிழகம் கஞ்சா தலைநகராக மாறி இருக்கிறது.
டவுட் தனபாலு: ஒருபக்கம் டாஸ்மாக் விற்பனை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துட்டே போகுது... மறுபக்கம் கஞ்சா விற்பனையும் சக்கை போடு போடுது... இது இல்லாம, போதை பொருட்கள் புழக்கமும் அதிகமாகுது... 'எல்லாருக்கும் எல்லாம்'னு முதல்வர் அடிக்கடி சொல்றது, இதை தானோ என்ற, 'டவுட்'தான் வருது!
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு: லோக்சபா தேர்தலில், ஓட்டுப்பதிவை அதிகரிக்க, தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. ஆனாலும், 2019 தேர்தலை விட, 2 சதவீதம் ஓட்டுகள் குறைந்துள்ளன. இது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். மக்களிடம் ஏன் ஓட்டளிக்கவில்லை என்று கேட்க வேண்டும். இதற்கு தேர்தல் கமிஷனிடம் அனுமதி பெற்றால், அதற்கு தேவையான நிதி வழங்கப்படும்.
டவுட் தனபாலு: அந்த ஆய்வுல யாராவது, 'சோம்பேறித்தனமா வீட்டுல துாங்குனோம்; வெளியூர் சுற்றுலா போனோம்'னு உண்மையை வெளிப்படையா சொல்லுவாங்களா... காய்ச்சல், தலைவலி, கால் குடைச்சல்னு வண்டி, வண்டியா பொய்களை அடுக்குவாங்க... அதனால, ஆய்வுன்னு மக்களின் வரிப்பணத்தை வெட்டியா செலவழிக்கணுமா என்ற, 'டவுட்'தான் வருது!

