PUBLISHED ON : ஏப் 25, 2024 12:00 AM

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: பிரதமர் மோடி, ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது, முஸ்லிம் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. ஓட்டு வங்கி அரசியலுக்காக, அரசியல் கட்சி தலைவர்களும், நாட்டின் உயர் பதவியில் உள்ள பிரதமரும், இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது, இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல.
டவுட் தனபாலு: முதல்வர் பதவியை காப்பாத்திக்க, பா.ஜ., கூட்டணியில் நாலு வருஷமா நீடிச்ச நீங்க, பதவி பறிபோனதும் அந்த கூட்டணிக்கு, 'டாட்டா' காட்டுனீங்க... ஆனா, 'முஸ்லிம்களுக்காகவே பா.ஜ., கூட்டணியில் இருந்து வெளியே வந்தேன்'னு சொன்னது மட்டும் ஓட்டு வங்கி அரசியல் இல்லையா என்ற, 'டவுட்' வருதே!
பத்திரிகை செய்தி: தமிழகத்தில் அரசு, உதவி பெறும் பள்ளிகளில், மதிய உணவுத் திட்டத்தில், ஏப்., 5க்கு பின் எவ்வித அறிவிப்பும் இல்லாமல் சத்துணவுடன் முட்டை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இக்கல்வியாண்டில் 210 நாட்கள் முட்டை வழங்க வேண்டும் என்ற ஒப்பந்தம் உள்ளது. அதற்கான நிதியும் அரசு ஒதுக்கிவிட்டது. ஒப்பந்தப்படி 10 நாட்களுக்கும் மேலாக சத்துணவில் முட்டை வழங்கப்படவில்லை.
டவுட் தனபாலு: பத்து நாட்கள் முட்டை வழங்காதது சாதாரணமா தெரியலாம்... ஆனா, தமிழகம் முழுக்க இருக்கிற பல ஆயிரம் அரசு பள்ளிகளில் படிக்கிற பல லட்சம் மாணவர்கள், அவங்களுக்கு தலா 10 முட்டைகளுக்கான பணம் என்று கணக்கு போட்டு பார்த்தா, பல கோடிகள் தேறும்... அந்த கோடிகள் எல்லாம் யாருடைய பாக்கெட்டுக்கு போனது என்பது தான், 'டவுட்!'
காங்., மூத்த தலைவர் ப.சிதம்பரம்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நாடு முழுதும் பேசு பொருளாக மாறியுள்ளது. அதே சமயம் பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையை யாரும் கண்டுகொள்ளவில்லை. அது ஒரு தேர்தல் அறிக்கையாகவே இல்லை. அதற்கு மோடியின் உத்தரவாதம் என்று பெயரிட்டுள்ளனர்.
டவுட் தனபாலு: காங்., தேர்தல் அறிக்கையில், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வாரி விட்டிருப்பதால், இதை எல்லாம் செய்வாங்களா, செய்ய முடியுமான்னு மக்கள் விவாதம் பண்ணிட்டு இருக்காங்க... குறைகுடம் தான் தளும்பும்; நிறைகுடம் தளும்பாது என்பது, மூத்த தலைவரான சிதம்பரத்துக்கு தெரியாதா என்ற, 'டவுட்'தான் வருது!

