PUBLISHED ON : ஏப் 28, 2024 12:00 AM

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: புதுக்கோட்டை மாவட்டம், சங்கம்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட குருவண்டான் தெருவில், பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்க மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. அந்த குடிநீர் தொட்டியில், மாட்டு சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றதுமட்டுமின்றி, மனித தன்மையற்ற செயல். வேங்கைவயல் குடிநீர் தொட்டியில், மனித கழிவு கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து, 17 மாதங்களாகி விட்டன. ஆனால், அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
டவுட் தனபாலு: ஸ்காட்லாந்து யார்டுக்கு நிகரானது தமிழக போலீஸ்னு சொல்லுவாங்க... வேங்கைவயல் சம்பவத்துல குற்றவாளிகளை கண்டுபிடிச்சு, கடும் தண்டனை வாங்கி குடுத்திருந்தா, இப்ப குடிநீர் தொட்டியில மாட்டு சாணத்தை கலக்கும் துணிச்சல் யாருக்காவது வந்திருக்குமா என்பது, 'டவுட்'தான்!
'மெட்டா' நிறுவனத்தின் இந்திய அதிகாரி தேஜஸ் காரியா: 'வாட்ஸாப்' செயலி வாயிலாக பகிரப்படும் தகவல்கள் வெளியே கசியாமல், மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என்ற காரணத்தால் தான், உலகம் முழுதும் கோடிக்கணக்கானோர் அதை பயன்படுத்துகின்றனர். எனவே, பயனர்கள் எங்கள் மீது வைத்துள்ளநம்பிக்கையை சிதைக்கும் விதமாக, தகவல்களை அணுக அனுமதி தரும்படி தொடர்ந்து வற்புறுத்தினால், இந்தியாவில் எங்கள் சேவையை நிறுத்துவதை தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை.
டவுட் தனபாலு: பயங்கரவாதிகள் பகிரும் தகவல்களை கூட தர முடியாது என நீங்க வீம்பு காட்டி வெளியேறினால், பாதிப்பு எங்களுக்கு அல்ல... இந்தியாவில், 40 கோடி பயனாளர்களை வைத்துள்ள உங்களுக்கு தான் நஷ்டம் என்பதில், 'டவுட்'டே இல்லை!
பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி பிரிவு இயக்குனர் நாகராஜ முருகன்: புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ், தமிழகத்தில் எழுத, படிக்க தெரியாத, 15 வயதுக்கு மேற்பட்டவர்களை கணக்கெடுக்கும் பணிகளை மாவட்ட வாரியாக மேற்கொள்ள வேண்டும். கிராம அளவில் எழுத, படிக்க தெரியாதவர்கள் குறித்த விபரங்களை சேகரிக்கும் பணிகளை, மே முதல் வாரத்தில் துவங்க வேண்டும்.
டவுட் தனபாலு: கிட்டத்தட்ட 57 வருஷமா தமிழகத்தை ஆளும் திராவிட கட்சிகள், நாங்க அதை செய்தோம், இதை செய்தோம்னு தம்பட்டம் அடிச்சுக்குறாங்க... ஆனா, இன்னும் எழுத படிக்க தெரியாதவங்க இருக்காங்க என்பதும், அவங்களை கணக்கெடுங்கன்னு சொல்றதும், திராவிட கட்சிகளின் ஆட்சிக்கு பெரிய கரும்புள்ளி என்பதில், 'டவுட்'டே இல்லை!

