/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
அதிகாரி தயவில் ஆட்டம் போடும் பெண் இன்ஸ்பெக்டர்!
/
அதிகாரி தயவில் ஆட்டம் போடும் பெண் இன்ஸ்பெக்டர்!
PUBLISHED ON : மார் 15, 2026 02:11 AM

பெ ஞ்சில் அமர்ந்ததுமே, “நிறைய விஷயங்களை மாத்திட்டு இருக்காங்க...” என்றார், அந்தோணிசாமி.
“யாரு, எதை மாத்திண்டு இருக்கா ஓய்...” என கேட்டார், குப்பண்ணா.
“செங்கல்பட்டு கலெக்டரா இருந்த சினேகாவை, சமீபத்துல காஞ்சிபுரத்துக்கு மாத்தினாங்களே... இவங்களுக்கு, அரசு ரெண்டு கார்கள் குடுத்திருக்கு... ஆனா, ஒரு கார் போதும்னு சொல்லிட்டாங்க...
“கலெக்டர் அலுவலகத்தில் ஊழியர்களை கண்காணிக்க, கூடுதல் கேமராக்கள் பொருத்த சொல்லிட்டாங்க... தன் பங்களாவில் இருந்த முகாம் அலுவலகத்தை, கலெக்டர் அலுவலகத்துக்கே மாத்திட்டாங்க...
“பங்களாவில் பல வருஷங்களா பணியில் இருந்தவங்களை, 'அலுவலகத்துல போய் வேலை பாருங்க'ன்னு அனுப்பிட்டாங்க... ராத்திரி 9:30 மணி வரைக்கும், அலுவலகத்துல இருந்து வேலைகளை முடிச்சிட்டு தான் கிளம்புறாங்க...” என்றார், அந்தோணிசாமி.
“எழுத்தர் கொடிதான் பறக்கறது ஓய்...” என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
“ஆவடி கமிஷனரக கட்டுப்பாட்டில், வாரத்தில் ரெண்டாவது கிழமை பெயர்ல, ஒரு போலீஸ் ஸ்டேஷன் இருக்கு... இங்க, 2021ல் இருந்து எழுத்தரா ஒருத்தர் இருக்கார் ஓய்...
“இந்த ஸ்டேஷனுக்கு வர்ற போலீசார் முதல் இன்ஸ்பெக்டர் வரை, இவரை அனுசரிச்சு போகணும்... இல்லாட்டி, அவாளை வேற இடத்துக்கு துாக்கி அடிச்சிடுவார் ஓய்...
“ஏன்னா, எழுத்தருக்கு, உளவுத்துறை சிறப்பு எஸ்.ஐ., ஒருத்தரும், உதவி கமிஷனர் ஒருத்தரும் ரொம்பவே நெருக்கம்... ஒட்டுமொத்த மாமூல் தொகையை, எழுத்தர் கையில எல்லாரும் குடுத்துடறா... அவர்தான் எல்லாருக்கும் பங்கு பிரிச்சு குடுக்கறார் ஓய்...” என்றார், குப்பண்ணா.
“முத்துகிருஷ்ணன், இங்கன உட்காரும்... ஜெயசந்திரனும், ரவிகுமாரும் இப்பதான் செவ்வாய்பேட்டைக்கு கிளம்பினாவ வே...” என்ற பெரியசாமி அண்ணாச்சியே, “மண்டல அதிகாரி தயவுல ஆட்டம் போடுதாங்க...” என்றார்.
“எந்த துறையில பா...” என கேட்டார், அன்வர்பாய்.
“பெரம்பலுார் எஸ்.பி., ஆபீஸ்ல ஒரு பெண் அதிகாரி இருக்காங்க... உயர் அதிகாரிகளே, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை எடுக்காம ஆபீசுக்கு வர்றாவ வே... ஆனா, இவங்க வாராவாரம் ஞாயிற்றுக் கிழமை ஓய்வு எடுத்துடுதாங்க... இவங்களுக்கு, மண்டல உயர் அதிகாரியின் முழு ஆதரவும் இருக்கு வே...
“இதனால, பெண் அதிகாரி, தனக்கு பிடிக்காதவங்களை பத்தி மண்டல அதிகாரியிடம், 'போட்டு' குடுத்து பழிவாங்கிடுதாங்க... வேலையிலும் ஏனோ தானோன்னு தான் இருக்காங்க வே...
“இவங்களுக்கும், கலெக்டர் ஆபீஸ்ல ஒரு பெண் அதிகாரிக்கும் மோதல் ஏற்பட்டு, கலெக்டர் வரைக்கும் பஞ்சாயத்து போயிட்டு... 'ஆளுங்கட்சியினரை மதிக்காம, எதிர்க்கட்சியினரான அ.தி.மு.க.,வினர் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் தர்றாங்க'ன்னு, தி.மு.க.,வினரும் இவங்க மேல புகார் பட்டியல் வாசிக்காவ வே...
“புகார் தர வர்ற பொதுமக்களிடம், 'உங்களது எதிர் பார்ட்டி உள்ளே போயிட்டு ஜாமின்ல வந்து, உங்களை ஏதாவது செஞ்சா என்னாகும்'னு சொல்லி மிரட்டுதாங்க... வயசுல மூத்தவர், டி.எஸ்.பி.,யா இருந்தாலும் கூட, மரியாதை தராம ஒருமையில தான் பேசுதாங்க... மண்டல அதிகாரி தயவுல இருக்கிற இவங்களை எதிர்க்க, எந்த அதிகாரிக்கும் துணிச்சல் இல்ல வே...” என முடித்தார், அண்ணாச்சி.
ஒலித்த மொபைல் போனை எடுத்த அந்தோணிசாமி, “பாலகிருஷ்ணன்... சண்முகபிரியா மேடம்கிட்ட பேசிட்டீங்களா...” என்றபடியே நடக்க, மற்றவர்களும் கிளம்பினர்.

