PUBLISHED ON : மே 02, 2024 12:00 AM

அரக்கோணம் தொகுதி பா.ம.க., வேட்பாளர் பாலு: அரக்கோணம் தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் ஜெகத்ரட்சகன், 50 கோடி ரூபாய்க்கு மேல், தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக, 80 சதவீத வாக்காளர்களுக்கு கொடுத்துள்ளார். இது தொடர்பான புகார் மீது, தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் நடவடிக்கை எடுக்கவில்லை.
டவுட் தனபாலு: தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் என்ன வானத்துல இருந்தா குதிச்சு வந்திருக்காரு... அவரும் தி.மு.க., அரசின் கீழ் பணிபுரியும் அதிகாரி தானே... ஆளுங்கட்சி வேட்பாளர் மேல நடவடிக்கை எடுத்தா, தேர்தல் விதிகள் வாபஸ் ஆனதும் அவரது கதி அதோ கதியாகிடும் என்பது தங்களுக்கு தெரியாதா என்ற, 'டவுட்' வருதே!
உ.பி.,யில் செயல்படும் சமாஜ்வாதி கட்சியின் எம்.பி., டிம்பிள் யாதவ்: லோக்சபா தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நம் நாடு 15 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விடும். விலைவாசி உயர்வு போன்ற உண்மையான பிரச்னைகளில் இருந்து கவனத்தை திசை திருப்ப, அக்கட்சி பிரித்தாளும் அரசியலில் ஈடுபடுகிறது.
டவுட் தனபாலு: ஏற்கனவே, 10 வருஷமா மோடி பிரதமரா இருந்ததுல, உலக அளவில் பொருளாதாரத்தில் ஐந்தாவது பெரிய நாடாக இந்தியா மாறியுள்ளது... இதை, மூன்றாம் இடத்துக்கு முன்னேற்ற அவர் திட்டம் போடுவது பொறுக்க முடியாமல், இப்படி எல்லாம் குற்றம் சாட்டுறீங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
ஆந்திர காங்., தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா: ஆந்திராவில் கடந்த ஐந்து ஆண்டுகளாக, பிரதமர் நரேந்திர மோடியின் கைப்பாவையாக முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி செயல்படுகிறார். அவர் என்ன சொல்கிறாரோ, அதை அப்படியே ஜெகன் மோகன் செய்து முடிக்கிறார். இருவருக்கும் இடையே ரகசிய டீலிங் உள்ளது.
டவுட் தனபாலு: நீங்க சொல்ற மாதிரியே உங்க சகோதரர் ஜெகன் மோகன் ரெட்டி, மோடியின் கைப்பாவையாக இருந்திருந்தால், அவர் கூடத்தானே பா.ஜ., கூட்டணி அமைச்சிருக்கணும்... ஜெகனுக்கு பரம விரோதியான சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியுடன் தானே பா.ஜ., கூட்டணி அமைத்துள்ளது... அதனால, உங்க புகார் மக்கள் மத்தியில எடுபடுவது, 'டவுட்'தான்!

