PUBLISHED ON : மே 04, 2024 12:00 AM

காங்., - எம்.பி., சசிதரூர்: இதுவரை நடந்து முடிந்துள்ள 190 தொகுதிகளுக்கான தேர்தல், எங்கள் கூட்டணிக்கு சாதகமாக உள்ளது. பா.ஜ.,வின் 400 தொகுதி கோஷம் என்பது ஒரு ஜோக். போகிற போக்கை பார்த்தால், 200 தொகுதிகளில் வெற்றி பெறுவதே, அவர்களுக்கு சவாலானதாக இருக்கும்.
டவுட் தனபாலு: இதுவரை நடந்துள்ள தேர்தலின் முடிவுகள் உங்களுக்கு எப்படி தெரியவந்துச்சு...? இதையே பா.ஜ., தரப்பு சொல்லியிருந்தால், 'பார்த்தீங்களா... ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்ல ஊடுருவிட்டாங்க'ன்னு குமுறி தள்ளியிருப்பீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி: இரவு நேரத்தில், 10:00 முதல் மறுநாள் காலை 6:00 மணி வரை தொடர்ந்து எட்டு மணி நேரம், கிராம பகுதிகளில் விவசாயிகளுக்கு வழங்கி வந்த இலவச மும்முனை மின்சாரம், தேர்தலுக்கு முன், 5 மணி நேரமாக குறைக்கப்பட்டது. தேர்தலுக்கு பின் இது, 3 மணி நேரமாக குறைக்கப்பட்டு உள்ளது. இதனால், கடுமையான வறட்சி காலத்தில் பாசனம் செய்ய முடியாமல், மகசூல் இழப்பை விவசாயிகள் எதிர்கொண்டுள்ளனர்.
டவுட் தனபாலு: வறுத்தெடுக்கும் கோடையில், மின் பற்றாக்குறையை எப்படி சமாளிப்பது என தெரியாமல், விவசாய இணைப்புகள்ல கை வச்சிடுறாங்க போலும்... இந்த மூணு மணி நேரமும் இன்னும் குறையுமே தவிர, இப்போதைக்கு அதிகரிக்குமா என்பது, 'டவுட்'தான்!
பத்திரிகை செய்தி: சென்னை கடற்கரை -- திருண்ணாமலை ரயில் சேவை மே, 2ம் தேதி முதல் துவங்கியுள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6:00 மணிக்கு புறப்படும் இந்த ரயில், நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலையை அடையும். பயண கட்டணம் 50 ரூபாய் மட்டுமே.
டவுட் தனபாலு: அது சரி... 50 ரூபாயை குடுத்துட்டு, ஆறு மணி நேரம் மாட்டு வண்டி வேகத்துல போறதுக்கு பதிலாக, மக்கள் நாலு மணி நேரத்தில் பஸ்லயே போயிடுவாங்களே... ஆன்மிக பூமியான திருவண்ணாமலைக்கும் ஒரு வந்தே பாரத் சேவையை துவங்கினா, ரயில்வே துறையை, 'டவுட்'டே இல்லாம பாராட்டலாம்.