PUBLISHED ON : மே 19, 2024 12:00 AM

தமிழக காங்., மூத்த தலைவர் இளங்கோவன்: தேர்தலுக்கு முன் காமராஜர் ஆட்சி பற்றி நாம் பேசியிருக்க முடியாது; பேசவும் கூடாது. நல்லவேளை, தேர்தல் முடிந்த பின் பேசினோம். யார் நல்லாட்சி தந்தாலும், அது காமராஜர் ஆட்சிதான். ஸ்டாலின் நல்லாட்சி தந்து கொண்டிருக்கிறார். அவரை முழு மனதோடு பாராட்டுகிறேன். இந்த ஆட்சிக்கு எப்படி வேண்டுமானாலும் பெயர் வைக்கலாம். காமராஜர் ஆட்சி என, பெயர் வைக்கலாம்; திராவிட மாடல் ஆட்சி என்றும் பெயர் வைக்கலாம். கக்கனின் நேர்மையையும் சொல்லலாம்.
டவுட் தனபாலு: தெருவுக்கு தெரு டாஸ்மாக் மதுபான கடைகள், பற்றாக்குறைக்கு தாராளமான கஞ்சா புழக்கம் எல்லாம் காமராஜர் ஆட்சியில இருந்துச்சா என்ன...? உங்களது இந்த பேச்சை கேட்டு, காமராஜர், கக்கன் ஆன்மாக்கள் ரத்தக்கண்ணீர் வடிச்சிருக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை: காமராஜர்கண்ட கனவை ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார். அதில், எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. தமிழகத்தில் நல்லாட்சி நடக்கிறது. இதை, சட்டசபையில் பலமுறை பாராட்டி பேசியுள்ளோம்.
டவுட் தனபாலு: 'சீட் பிரிச்சு கொடுக்கிற இடத்துல நாம இருக்கணும்'னு உணர்ச்சி வசப்பட்டு பேசிட்டீங்க... இப்ப, 'காமராஜர் கனவை ஸ்டாலின் நிறைவேத்திட்டு இருக்கார்'னு அந்தர்பல்டி அடிச்சுட்டீங்களே... எங்க இருந்தோ உங்களுக்கு, 'பாட்டு' விழுந்திப்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
காங்., - எம்.பி., ராகுல்: ரேபரேலி தொகுதியில் நான் வெற்றி பெற்றால், அங்கு என்ன வளர்ச்சி திட்டங்கள் நடக்கிறதோ, அவை அனைத்தும் அமேதிக்கும் செய்து தரப்படும். அங்கு 10 ரூபாய் செலவு செய்தால், இங்கும் அதே தொகை செலவிடப்படும்.
டவுட் தனபாலு: ஏற்கனவே, அமேதி தொகுதி எம்.பி.,யா இருந்த பாசத்துல பேசுறது நல்லாவே தெரியுது... தப்பி தவறி, உங்க கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும், இந்த ரெண்டு தொகுதிகளை மட்டும் தான் ஊட்டி வளர்ப்பீங்க; மற்ற தொகுதிகளை மாற்றாந்தாய் மனப்பான்மையில தான் நடத்துவீங்களோ என்ற, 'டவுட்' வருதே!

