PUBLISHED ON : மே 21, 2024 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார்: லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., ஒரு கட்சியுடன் கூட்டணி பேச்சில் ஈடுபட்டால், அக் கட்சியை பா.ஜ., கடத்தி சென்று பேச்சு நடத்தியது. மத்திய அமைச்சர், கவர்னர் பதவிகளோடு தமிழகத்தில் பட்டா போட்டு தருகிறோம் என பேச்சில் ஈடுபட்டது.
டவுட் தனபாலு: பா.ம.க.,வுடன் நீங்க கூட்டணி பேச்சு நடத்தியதையும், அந்த கட்சியை பா.ஜ., தள்ளிட்டு போனதையும் தான் பூடகமாக சொல்றீங்க என்பது தெரியுது... பா.ம.க., பெயரை குறிப்பிட்டு சொன்னால், எதிர்காலத்தில் அந்த கட்சியுடன் கூட்டணி அமைக்க முடியாது என்று தான் அவங்க பெயரை பயன்படுத்தாம குத்திக்காட்டுவது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
பா.ஜ.,வைச் சேர்ந்த ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்: முதல் பிரதமரான நேரு துவங்கி இந்திரா, ராஜிவ், மன்மோகன் சிங் வரை நாட்டில் வறுமையை ஒழிப்பதில் தோல்வி அடைந்தனர். பிரதமர் மோடி வந்த பின் ஏழைகளின் துயரம் குறைந்துள்ளது. அவர்களின் ரட்சகராக மோடி உள்ளார்.
டவுட் தனபாலு: தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டும் நேரத்தில், மோடியின் புகழ் பாடுவதில் மத்திய அமைச்சர்கள் மத்தியில போட்டியே நடக்குதே... மோடியின் 3.0 அரசிலும் இடம்பெற வேண்டும் என்ற ஆவல் தான் இதுக்கு காரணம் என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: ஜாபர் சாதிக் துவங்கி, தி.மு.க., பிரமுகர்கள் பலருக்கும் போதை பொருட்கள் விற்பனையில் தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் காமராஜின் உதவியாளரும், கஞ்சா வழக்கில் கைதாகி உள்ளார். இதன் வாயிலாக, ஆளுங்கட்சியும், ஆண்ட கட்சியும் கூட்டணி அமைத்து, போதை பொருட்களை விற்பனை செய்கின்றனரோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
டவுட் தனபாலு: உங்க அச்சம் நியாயமானது தான்... அதே நேரம், அந்த அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரும் உங்க குடும்பத்தின் வழியா தான் அரசியலுக்கு அறிமுகம் ஆனவர் என்பதை மறந்துட்டீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!

