PUBLISHED ON : ஜன 27, 2026 01:38 AM

விருதுநகர் தொகுதி காங்., - -எம்.பி., மாணிக்கம் தாகூர்:
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி, அதிகாரத்தில் பங்கு ஆகியவை தொடர்பாக, டில்லியில் காங்., தலைவர் கார்கே, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் ஆகியோர், எங்களது தனிப்பட்ட கருத்துகளை கேட்டனர். மேலும், இந்த கருத்துகளை வெளியில் பேசக்கூடாது எனவும், எங்களிடம் கூறியுள்ளனர்.
டவுட் தனபாலு: தமிழகத்தில், 'ஆட்சியில் பங்கு'ன்னு முழங்கிட்டு இருந்த உங்களிடம் எதுவும் பேசாம, உங்க டில்லி தலைமையிடம் தி.மு.க., 'பத்த' வச்சிடுச்சு போலிருக்கு... அதனால தான், கார்கேவும், ராகுலும் உங்களுக்கு வாய்ப்பூட்டு போட்டு அனுப்பி இருக்காங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
வி.சி., கட்சி துணை பொதுச்செயலர் வன்னியரசு:
கடந்த 2016ல், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டிலேயே, ஆட்சி, அதிகாரத்தில் பங்கு குறித்து பேசியுள்ளோம். எங்கள் முழக்கம், கொள்கை அடிப்படையிலானது. ஆனால், தமிழக காங்கிரஸ் முன்வைப்பது, கொள்கை அடிப்படையிலானதா, தேர்தல் பேரத்திற்காகவா என்ற சந்தேகம் எழுகிறது. இதனால், தி.மு.க., கூட்டணிக்குள் சலசலப்பும், குழப்பமும் ஏற்படுகிறது.
டவுட் தனபாலு: காங்கிரசின் கொள்கை, ஆசைங்கிறதெல்லாம், அக்கட்சியின் உரிமை. அவங்க ஆசைப்பட்டா, உங்களுக்கு ஏன் முதுகு அறிக்குது? இத்தனை வருஷமா, நீங்க உங்க ஆசையை மனசுலயே பொதைச்சி வைக்க என்ன காரணம்ங்கிறத 'டவுட்'டை 'கிளியர்' செய்யுங்களேன்!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்:
தி.மு.க.,வுக்கும், அ.தி.மு.க.,வுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. கடந்த முறை பழனிசாமி, இந்த முறை ஸ்டாலின். தி.மு.க.,வில் இருக்கும் முதன்மையான அமைச்சர்கள், அ.தி.மு.க.,வில் இருந்து வந்தவர்கள். அதன்பின், எப்படி மாற்றம் ஏற்படும்? நம் அரசியலுக்கும், தத்துவத்திற்கும் யாரும் போட்டி போட முடியாது. அதனால், நமக்கு யாரும் போட்டியாளர்கள் இல்லை. என் கருத்துடைய கட்சிகள் ஏதும் இல்லாததால், தனித்து போட்டியிடுகிறேன்.
டவுட் தனபாலு: உங்க கருத்துகளுடன் ஒருமித்து போகும் கட்சிகள், தமிழகம் மட்டுமில்ல; ஒட்டுமொத்த இந்தியாவில் எங்குமே இருக்காது. அதே நேரம், தேர்தலுக்கு தேர்தல் தனித்தே போட்டியிடும் நீங்க, யாரை ஆட்சியில் அமர்த்த, எந்த கட்சியுடன் ரகசிய கூட்டணி வச்சிருக்கீங்க என்ற, 'டவுட்'டும் எழுது!

