PUBLISHED ON : மே 22, 2024 12:00 AM

அ.தி.மு.க., தலைமை நிலையச் செயலர் வேலுமணி:எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பின், அ.தி.மு.க.,வுக்கு வந்த பல்வேறு சோதனைகளை வென்று, கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றியது பழனிசாமி தான். அதனால் அவருடைய தலைமையை ஏற்றுள்ளோம். நான்காண்டு, இரு மாதங்கள் அவர் அற்புதமாக ஆட்சி நடத்தினார். மீண்டும் பழனிசாமி ஆட்சி வர வேண்டுமென்று, தமிழக மக்கள் விரும்புகின்றனர்; அந்த விருப்பம், லோக்சபா தேர்தலிலும் எதிரொலிக்கும். 2026 தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வென்று, பழனிசாமி மீண்டும் முதல்வராவார்.
டவுட் தனபாலு: கேட்க நல்லா தான் இருக்கு... ஆனா, தேர்தலுக்கு இன்னும் ரெண்டு வருஷம் இருக்கு... எதுக்கும் லோக்சபா தேர்தல் முடிவுகளை பார்த்துட்டு, சவால் விடுங்க... ஏன்னா, உங்க சவாலை பழனிசாமியே நம்புவாரா என்பது, 'டவுட்'தான்!
பா.ஜ.,வை சேர்ந்த, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்: நாட்டில் ஏதேனும் நெருக்கடி ஏற்பட்டால், நாட்டை விட்டு வெளியேறுவோரில் முதல் ஆளாக இருப்பவர், ராகுல். நுாற்றாண்டில் மிகப்பெரிய நெருக்கடியாக கொரோனா இருந்தது. அந்த சமயத்தில், அவர் எங்காவது தென்பட்டாரா?
டவுட் தனபாலு: ராகுல் மட்டுமில்லை... உங்க கட்சிகளின் தலைவர்கள் கூடத்தான், வீடுகள்லயே முடங்கி கிடந்தாங்க... ஏன், ஒட்டுமொத்த உலகமுமே உறைஞ்சு தானே கிடந்தது... தேர்தலுக்காக, ராகுல் மீது இப்படி குற்றம் சாட்டுவது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
பா.ஜ.,வை சேர்ந்த, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா: ஓட்டு வங்கி அரசியலுக்காக, ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370ஐ காங்., ரத்து செய்யவில்லை. நாட்டின் நலன் மீது அக்கட்சிக்கு அக்கறை இல்லை. குடும்பத்துக்காக உழைக்கும் கட்சியாகவே காங்., உள்ளது.
டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... தற்காலிகமாவே, 370வது சட்டப்பிரிவு என்று தான், நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் ஆட்சியாளர்கள் வாக்குறுதி தந்தாங்க... ஆனா, சலுகையாக கொடுத்ததை ஒரு கட்டத்தில் உரிமையாகவே மாற்றி குடுத்துட்டாங்க... அந்த உரிமையை உங்க ஆட்சி மீட்டு தந்திருக்கு என்பதில், 'டவுட்'டே இல்லை!

