PUBLISHED ON : மே 24, 2024 12:00 AM

தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன்: தற்போது வந்துள்ள புதிய வகை கொரோனாவின் பெயர் கே.பி., - 2. சிங்கப்பூரில் அதிகளவில் பரவியுள்ள இது, 90 சதவீதத்திற்கு மேல் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாத வைரஸ். இதனால், யாரும் பெரிய அளவில் பதற்றமடைய வேண்டாம். இந்தியாவின் 11 மாநிலங்களில், இந்த வகை கொரோனா வைரசின் பாதிப்பு தென்படுகிறது. இருப்பினும், தமிழகத்தில் கட்டுக்குள் இருக்கிறது.
டவுட் தனபாலு: இனி, கொரோனா எந்த வகையில உருமாறி வந்தாலும், நம்ம மக்கள் கலங்க மாட்டாங்க... ஆனா, கொசுக்களால உருவாகும் டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல்களை கண்டுதான் பயப்படுறாங்க... அதனால நீங்க டெங்கு, மலேரியாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தா, 'டவுட்'டே இல்லாம தங்களை பாராட்டலாம்!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி: கபட நாடகம் ஆடுதல், இரட்டை வேடம் போடுதல், உண்ட வீட்டிற்கே துரோகம் செய்தல், நம்பி ஓட்டளித்த மக்களுக்கு துரோகம் இழைத்தல் போன்ற செயல்கள், தி.மு.க.,வினருக்கு கைவந்த கலை. இதை, தமிழக மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.
டவுட் தனபாலு: ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைக்கிறது, பதவி தந்தவங்களையே கட்சியில இருந்து துாக்கி வீசுறது எல்லாம் உங்க கட்சியிலயும் நடந்திருக்குதே... அதை எல்லாம் தி.மு.க.,வினர் திருப்பி போட்டு தாக்குனா, உங்களால பதில் தர முடியுமா என்ற, 'டவுட்' எழுதே!
மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன்: 'யு டியூபர்' இர்பான், முறைப்படி மன்னிப்பு கடிதம் வழங்கியுள்ளார். அவர், இந்தியாவில் கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்பது குறித்து பரிசோதனை செய்யவில்லை. அதனால், எந்த மாதிரியான சட்ட நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து, சட்ட வல்லுனர்களுடன் ஆலோசிக்கப்படும்.
டவுட் தனபாலு: எது, எதைத்தான் யு டியூப்ல போடுறது என்ற விவஸ்தை இல்லாம போயிட்டு இருக்குது... இர்பான் மாதிரி ஆட்களை மன்னிப்பு கடிதம் மட்டும் வாங்கிட்டு விடாம, கடும் நடவடிக்கை எடுத்தால் தான், யு டியூபர்கள் அட்ராசிட்டிக்கு ஒரு முடிவு வரும் என்பதில், 'டவுட்'டே இல்லை!