PUBLISHED ON : மே 26, 2024 12:00 AM

தேசியவாத காங்கிரஸ் கட்சி, சரத் பவார் அணி தலைவர் சரத் பவார்: காங்கிரஸ் தலைமை யிலான முந்தைய மத்திய அரசுகள் பலவீனமாக இருந்ததாக, பிரதமர் மோடி தேர்தல் பிரசாரங்களில் பேசுகிறார். இதுபோன்ற பேச்சுகள் கவலையை ஏற்படுத்து கின்றன. முக்கிய பதவியில் இருப்பவர்கள் கவனமுடன் பேச வேண்டும்.
டவுட் தனபாலு: அவர் சொன்னதில் என்ன தப்பு... கூட்டணி அரசில் அங்கம் வகித்த தி.மு.க., போன்ற கட்சிகள் அப்போதைய மத்திய அரசை மிரட்டி முக்கிய மந்திரி பதவிகளை வாங்கலையா... பாகிஸ்தானும், பயங்கரவாதிகளும் வால் ஆட்டலையா... ஊழல்வாதிகள் பேயாட்டம் ஆடலையா... ஒருவேளை இதையெல்லாம் 10 வருஷத்துக்கு அப்புறமும் ஞாபகப்படுத்துறாரேன்னு இவருக்கு கவலை வந்துடுச்சா என்ற, 'டவுட்' தான் வருது!
தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு: திருச்சி, பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்கு, முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் வைக்கப்பட வேண்டும். தமிழகத்தில் மிக உயரமான கருணாநிதி சிலையை இங்கு நிறுவ வேண்டும். கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, திருச்சி மாவட்டத் தில், 14 ஒன்றியங்களில் உள்ள, 2,000 கிராமங்களில் கருணாநிதி சிலை அமைக்கப்படும்.
டவுட் தனபாலு: மூன்றாண்டு தி.மு.க., ஆட்சியில் கருணாநிதி பெயர் சூட்டுறதும், சிலை அமைக்கிறதுமா தான் இருந்தீங்க... அடுத்த ரெண்டு வருஷமாச்சும் ஏதாச்சும் உருப்படியா நடக்கும்னு நம்பிட்டு இருந்த மக்களுக்கு, உங்க 2,000 சிலை அமைக்கும் திட்டம் கடுப்பை தான் கிளப்பும் என்பதில் 'டவுட்'டே இல்லை!
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: 'லோக்சபா தேர்தல் முடிவிற்கு பின் தென் மாவட்டங்களில், பா.ஜ., மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுக்கும்' என, அண்ணாமலை கூறியுள்ளார். தேர்தல் முடிவில் நாம் தமிழர் கட்சியை விட அதிக ஓட்டுகள் பெற்று விட்டால், என் கட்சியை கலைத்து விடுகிறேன்.
டவுட் தனபாலு: நீங்க சொல்ற மாதிரி இப்ப கட்சியை கலைக்குறீங்களோ, இல்லையோ... தொடர்ந்து, தனித்து போட்டியிட்டு தோல்விகளை மட்டுமே சந்திச்சிட்டு இருந்தா, ஒரு கட்டத்தில் உங்க கட்சி தானாகவே கலைஞ்சிடும் என்ற 'டவுட்' உங்களுக்கு வரலையா?