PUBLISHED ON : ஜூன் 16, 2024 12:00 AM

தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலின்போது, சந்தித்த சவால்கள் அதற்கு பிந்தைய செயல்பாடுகள் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா என்னிடம் விசாரித்தார். அதுகுறித்து விபரங்கள் கூறினேன். விழா மேடையில் நிறைய பேச முடியாத சூழலில், அரசியல் பணிகளையும், தொகுதி சார்ந்த பணிகளையும்தீவிரப்படுத்துமாறு அறிவுறுத் தினார். ஆனால், வேறு விதமாக தகவல்கள் பரப்பப்படுகின்றன. அது தவறானவை.
டவுட் தனபாலு: ஆனா, அமித் ஷாவின் கை அசைவுகள், 'ஜாக்கிரதையா இருங்க... இல்லன்னா நடக்கிறதே வேற' என்று மிரட்டுற மாதிரி அல்லவா இருந்துச்சு... இதை, சம்பவம் நடந்த உடனே நீங்க விளக்கமா தந்திருக்கலாமே... என்ன சொல்றதுன்னு ரெண்டு நாளா ரூம் போட்டு யோசனை பண்ணிட்டு இருந்தீங்களோ என்ற, 'டவுட்' எழுவதை தவிர்க்க முடியலை!
தமிழக பொதுப்பணி துறை அமைச்சர் வேலு: வழக்கு நிலுவைகளால், பாலம் பணி தாமதமாகி, நெரிசல் ஏற்பட்டால், 'தோண்டி போட்டுட்டு போயிட்டாங்க... என்ன ஆட்சி நடத்துறாங்க' என, அரசை மக்கள் விமர்சிப்பர். விமர்சனங்கள் இல்லாமல் பணியாற்றுவது கடினம்.
டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... பாலம் பணிகள் தாமதம் ஆனால், பாதிக்கப்படுவது மக்கள் தானே... அதனால, அவங்க விமர்சிக்க தான் செய்வாங்க... அவற்றை எல்லாம் உங்க வளர்ச்சிக்கு ஊக்கமா எடுத்துக்கிட்டு சிறப்பாக பணியாற்றினால், அதே மக்கள் உங்களை பாராட்டவும் செய்வாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன்: சுகாதார திட்டங்களை மக்களிடையே நேரடியாக கொண்டு சேர்க்கும் வகையில், பட்டம் பெற்றவர்கள் அரசு பணிக்கு வந்து சேவையாற்ற வேண்டும். அனைத்து மக்களும் எளிய வகையில் மருத்துவ வசதிகளை பெற, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தனியார் மருத்துவமனை மோகம் குறைந்து, அரசு மருத்துவமனைகள் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
டவுட் தனபாலு: விட்டா, 'அரசு மருத்துவமனைகளின் அபார எழுச்சியால், தனியார் மருத்துவமனைகள் எல்லாம் சீக்கிரமே பூட்டிட்டு போயிடுவாங்க'ன்னு சொன்னாலும் சொல்வீங்களோ... கார்ப்பரேட் மருத்துவமனைகள் ஊருக்கு ஊர் கிளைகள் திறப்பது, உங்க கவனத்துக்கு வரலையோ என்ற, 'டவுட்'தான் வருது!