PUBLISHED ON : ஜூலை 02, 2024 12:00 AM

பா.ம.க., தலைவர் அன்புமணி: விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பணிகளுக்கு, ஒன்பது அமைச்சர்கள் பொறுப்பாளர்களாக உள்ளனர். அவர்களுக்கு துணையாக மற்ற அமைச்சர்களும், 80க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்கள், ஆயிரக்கணக்கான உள்ளாட்சி பிரதிநிதிகளும் விக்கிரவாண்டியில் குவிந்துள்ளனர். அவர்கள், ஆயிரக்கணக்கான வாகனங்களில் தொகுதியில் வலம் வருகின்றனர். இது அப்பட்டமான விதிமீறல் என்பதால், அவர்கள் செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும்.
டவுட் தனபாலு: இதுக்கே கொந்தளிக்கிறீங்களே... தேர்தல் நெருங்க, நெருங்க, தெருவுக்கு தெரு பொறுப்பாளர்கள் புற்றீசல் போல புறப்பட்டு வருவாங்களே... அவங்களை எல்லாம் எப்படி சமாளித்து, விக்கிரவாண்டியில் வெற்றிக்கனியை பறிக்க போறீங்க என்ற, 'டவுட்' இப்பவே வருதே!
பத்திரிகை செய்தி: காலநிலை மாற்றத்தின் விளைவாக, அடுத்த 25 ஆண்டுகளில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், ஆண்டுக்கு எட்டு மாதங்கள் வரை வெப்ப அலை வீசுவதற்கான வாய்ப்பு உள்ளதாக அண்ணா பல்கலை ஆய்வில் தெரிய வந்துள்ளது.
டவுட் தனபாலு: பச்சை மரங்களை வெட்டி, கான்கிரீட் காடுகள் ஆக்கியது, மண் தரையை சிமென்ட் போட்டு மூடியது, 'ஏசி' இயந்திரங்களின் பயன்பாடு அதிகரிப்புன்னு நாம சொகுசா வாழ்வதற்காக இப்ப விதைக்கிற, 'வினை'களை எதிர்காலத்தில் நம் சந்ததியினர் தான் அறுவடை செய்யணும்... இனியாவது அரசும், மக்களும் விழிச்சுக்கணும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் ரவீந்திரநாத்: டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் 38,000 பேர், 12 ஆண்டுகளாக தினக்கூலிகளாக பணியாற்றுகின்றனர். இவர்கள், சுகாதாரத் துறையில் பணியாற்றினாலும், சுகாதார பணியாளர்களாக அங்கீகரிக்கப்படவில்லை. இதை முறைப்படுத்தி, சம வேலைக்கு, சம ஊதியம் என்ற அடிப்படையில், மாதாந்திர ஊதியமாக, 21,000 ரூபாய் வழங்க வேண்டும்.
டவுட் தனபாலு: அரசு டாக்டர்களே, ஊதிய உயர்வுக்காக கரடியா கத்தியும், அவங்க குரல் அரசாங்கத்தின் காதுகளில் விழுந்தபாடில்லை... இதுல, கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் கோரிக்கையை எல்லாம் இந்த அரசு ஏறெடுத்து பார்க்குமா என்பது, 'டவுட்'தான்!