PUBLISHED ON : ஜூலை 07, 2024 12:00 AM

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஒரு ஓட்டுக்கு 10,000 ரூபாய் விலை நிர்ணயித்துள்ளனர். ஆளும் கட்சி கொள்ளையடித்து குவித்து வைத்திருக்கும் பணத்தில், ஒரு லட்சம் ரூபாய் கேட்டால் கூட கொடுப்பர்.விலை மதிக்க முடியாத ஓட்டுரிமையை விற்கக் கூடாது என்பதை சிந்தித்து, விக்கிர வாண்டி மக்கள் ஓட்டளிக்க வேண்டும். இத்தனை அத்துமீறல்களையும் வேடிக்கை பார்க்கும் தேர்தல் ஆணையத்தை இழுத்து மூடி விடலாம். வாழ்க ஜனநாயகம்; வளர்க டோக்கன் தேர்தல்.
டவுட் தனபாலு: விக்கிரவாண்டி வாக்காளர்களுக்கு கிடைக்கிற, 'கவனிப்பை' பார்த்துட்டு, நாம அங்க பிறக்காம போயிட்டோமேன்னு பக்கத்து தொகுதி மக்கள் எல்லாம் பரிதவிச்சிட்டு இருக்காங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
***
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: ஈரோடு இடைத்தேர்தலில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, 'என் தாயின் சொந்த ஊர் இது; இந்த ஊரில் நான் பிறந்தேன் என்பதால் எங்கள் கட்சி போட்டியிடுகிறது. பன்னீர் செல்வத்திடமும் ஒதுங்கிக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டேன். அதை ஏற்று அவர் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கினார்' என்றார். ஆனால், அந்த தேர்தலில் 32,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க., தோற்றது.
டவுட் தனபாலு: பன்னீர்செல்வம் விலகியதால் தான், 32,000 ஓட்டுகள்ல அ.தி.மு.க., தோல்வி அடைஞ்சது... இல்லாம போயிருந்தா, ஈரோட்டுல பட்டியில வாக்காளர்களை அடைச்சு, 'கவனிச்ச' ஆளுங்கட்சியின் அதிரடிக்கு முன்னாடி, அ.தி.மு.க., டிபாசிட் காலியாகி இருக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
***
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: ஏதோ அண்ணாமலை வந்த பிறகுதான், தமிழகத்தில் பா.ஜ., வளர்ந்திருப்பது போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்கியுள்ளார். மற்ற கட்சி களை அவதுாறாக பேசுவதை தான், வழக்கமாக கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட மாநில தலைவர்கள் இருப்பதால் தான், 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய பா.ஜ., கூட்டணி அமைத்து மத்தியில் ஆட்சியில் அமர்ந்திருக்கிறது.
டவுட் தனபாலு: அண்ணா மலை வந்து பா.ஜ., வளர்ந்திருக்கோ, இல்லையோ தெரியாது... ஆனா, அ.தி.மு.க.,வின் தலைமை பதவிக்கு நீங்க வந்த பிறகு தான், தமிழக பா.ஜ., அபாரமா வளர்ந்திருக்கு என்பதில், 'டவுட்'டே இல்லை!
***