PUBLISHED ON : ஜூலை 11, 2024 12:00 AM

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்: நான் கருப்பாகவும், குள்ளமாகவும்இருப்பதால், மக்கள் என்னுடைய பேச்சை கேட்பதும் இல்லை; நம்புவதும் இல்லை. அதே நேரம் வெள்ளையாக இருந்து ஆங்கிலத்தில் பேசியிருந்தால், மக்கள் கேட்டு இருப்பர். நான் தமிழன் என்பது தான் என்னுடைய அடையாளம்.
டவுட் தனபாலு: அண்ணாதுரை, குள்ளமா தான் இருந்தார்... காமராஜர், கருப்பா தான் இருந்தார்... அவங்க எல்லாம் மாபெரும் மக்கள் தலைவர்களாக உருவெடுக்க வில்லையா... உருவம், நிறம் பார்த்து தமிழக மக்கள் ஓட்டுப் போடுவது இல்லை... உங்களது செயல்பாடுகள் தான், உங்க வெற்றியை தீர்மானிக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
பா.ம.க., தலைவர் அன்புமணி: விக்கிரவாண்டியில் பிரசாரம் செய்த அமைச்சர் உதயநிதி, 'விழுப்புரம் மாவட்டத்தில் 60,000 பேர், மாதம் 1,000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை பெற்று வருகின்றனர்' என, கூறியுள்ளார். கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் என, அனைத்து துறைகளிலும் விழுப்புரம் பின்தங்கிய மாவட்டமாக உள்ளது. இங்கு குறைவான எண்ணிக்கையில் உரிமைத் தொகை வழங்குவது என்பது சமூக அநீதி; துரோகம்.
டவுட் தனபாலு: உங்க தந்தை ராமதாஸ், 'நாட்டுல இலவசங்களே இருக்கக் கூடாது' என்கிறார்... நீங்களோ, 'உரிமைத் தொகை எண்ணிக்கையை உயர்த்தணும்'னு கேட்குறீங்க... சமூக நீதி சம்பந்தமா, உங்க ரெண்டு பேருக்கும் இடையில் சச்சரவு இருக்குதோ என்ற, 'டவுட்'தான் வருது!
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் ஸ்டாலினுக்கு மனமில்லை. பீஹார், கர்நாடக மாநிலங்களில் எடுக்கப்பட்ட ஜாதிவாரி கணக்குகளை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு பிரதமர் மோடி தடையாக இருக்க மாட்டார். அவர் முழு ஆதரவோடு உள்ளார். தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
டவுட் தனபாலு: 'ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு தான் நடத்தணும்'னு முதல்வர் ஸ்டாலின் சொல்றாரு... மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துற மத்திய அரசே, கையோட ஜாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்திடலாமே... அதை விட்டுட்டு, மாநில அரசு மீது பழி போடுவது ஏன் என்ற, 'டவுட்' வருதே!