PUBLISHED ON : ஜூலை 22, 2024 12:00 AM

தமிழக உயர்கல்வி அமைச்சர் பொன்முடி: 'நீட் தேர்வு வேண்டும்' எனக் கூறி வரும், பா.ஜ., தலைவர் அண்ணாமலையுடன் தான், 'நீட் தேர்வு கூடாது' என வலியுறுத்தி வரும், பா.ம.க.,வினர் கூட்டணி வைத்து, தேர்தலை சந்தித்தனர். அதனால் தான், லோக்சபா தேர்தல் மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், அக்கூட்டணியினரை மக்கள் ஏற்கவில்லை; படுதோல்வியை சந்தித்துள்ளனர்.
டவுட் தனபாலு: ராஜிவ் கொலையாளிகள் விடுதலையை கடுமையா எதிர்த்த, காங்.,குடன் தான் நீங்க கூட்டணியில் இருக்கீங்க... அதனால, கொள்கை கூட்டணியை எல்லாம் பார்த்து மக்கள் ஓட்டு போடுறது இல்லை... இடைத்தேர்தலில் நீங்க கொடுத்த நோட்டுகள் தான், ஓட்டுகளை வாரி தந்திருக்கு என்பதில், 'டவுட்'டே இல்லை!
சிவகங்கை காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம்: நிறைய பேர் கட்சியில் சேருகின்றனர் என்றதும், தலைமை சந்தோஷமடைகிறது; சேருவோருக்கு பொறுப்பும் வழங்குகின்றனர்; அவர்களின் பின்புலம் குறித்து விசாரிப்பதில்லை. அதனால் தான், ரவுடிகள் அரசியல் கட்சிகளில் சேர்வதோடு, பொறுப்பும் பெறுகின்றனர். பின், அவர்கள் ரவுடியிசத்தில் ஈடுபடும்போது, கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது. அதனால், அனைத்து அரசியல் கட்சிகளும், புதிதாக கட்சியில் சேருவோர் பின்புலம் குறித்து விசாரிக்க வேண்டும்.
டவுட் தனபாலு: ரவுடிகள் பின்புலம் தெரியாமலா, அவங்களை கட்சியில சேர்க்குறாங்க... அவங்க தானே, தேர்தல் நேரங்கள்ல, எதிர்க்கட்சியினரை தெறிக்க விடுவாங்க... அதனால, அரசியல் ஆதாயம் இல்லாம எந்த கட்சியும், ரவுடிகளை சேர்த்துக்காது என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை: காங்., கட்சியினர் ஒற்றுமையாக செயல்பட்டால், திருச்சி மலைக்கோட்டையில் இருந்து, சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக்கு செல்லும் காலம் வெகு விரைவில் வரும். தமிழகத்தில், காமராஜர் ஆட்சியை மீண்டும் கொண்டு வர வேண்டும். காமராஜர் ஆட்சி காலம் தான் தமிழகத்தின் பொற்காலம்.
டவுட் தனபாலு: 'ஸ்டாலின் ஆட்சியே காமராஜர் ஆட்சி தான்'னு உங்க கட்சியின் பல தலைவர்கள் நெக்குருகிட்டு இருக்காங்க... நீங்க என்னடான்னா, 'காமராஜர் ஆட்சி தான் தமிழகத்தின் பொற்காலம்'னு போட்டு தாக்குறீங்களே... இதன் வாயிலா, இப்ப தமிழகத்தில் நடப்பது, கற்கால ஆட்சின்னு சொல்ல வர்றீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!