PUBLISHED ON : ஜூலை 26, 2024 12:00 AM

அ.ம.மு.க., பொது செயலர் தினகரன்: லோக்சபா தேர்தலில், என்னை தேனி மக்கள் ஏமாற்றியதாக நினைக்க வில்லை. பணநாயகத்தை ஜனநாயகம் வெல்ல முடியவில்லை. வரும் காலங்களில், தேர்தல் மற்றும் அரசியல் அணுகுமுறை மாற்றப்படும். 2026 சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாய கூட்டணி ஆட்சி மலரும்.
டவுட் தனபாலு: வரும் காலங்களில், எந்த அணுகுமுறையை நீங்க மாத்தினாலும் வெற்றி கிடைப்பது, 'டவுட்'தான்... வைரத்தை வைரத்தால் தான் அறுக்கணும் என்பது மாதிரி, பணநாயகத்தை வெல்ல நீங்களும் மூட்டை, மூட்டையா பணத்தை இறக்கினால் தான், வெற்றி கோட்டை தொட்டு பார்க்க முடியும் என்பதிலும், 'டவுட்'டே இல்லை!
பா.ஜ.,வை சேர்ந்த, மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய்: ஜம்மு - காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாதிகளுக்கு பா.ஜ., ஆட்சியில் இரண்டு இடங்கள் தான் உள்ளன. ஒன்று சிறைக்கு செல்ல வேண்டும். இல்லை என்றால் நரகத்துக்கு அனுப்பப்படுவர். கடந்த சில தினங்களில் மட்டும் 28 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சிகள் பயங்கரவாதத்தை வைத்து அரசியல் செய்வது துரதிர்ஷ்டவசமானது.
டவுட் தனபாலு: அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் பயங்கரவாதிகளை சிறையில் அடைச்சு, மக்கள் வரிப்பணத்துல சோறு அல்லது சப்பாத்தி போட்டு வளர்க்கணுமா, என்ன... நீங்க சொன்ன இரண்டாவது வழிமுறையான, அவங்களை நரகத்துக்கு அனுப்பி வைப்பதே நல்ல முடிவாக இருக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார்: தேர்தல் களத்தில் எப்படி உழைக்க வேண்டும் என்றும், மக்களிடம் அ.தி.மு.க., அரசின் சாதனைகளை திண்ணை பிரசாரம் வழியே எடுத்து சொல்லவும், பழனிசாமி அறிவுரை வழங்கினார். அவர் வகுத்து கொடுத்த தேர்தல் வியூகத்தை முழுமையாக செயல்படுத்துவதாக உறுதி அளித்துள்ளோம்.
டவுட் தனபாலு: அப்படின்னா, லோக்சபா தேர்தல் களத்துக்கு பழனிசாமி வியூகம் வகுத்து தரலையா அல்லது அவர் வகுத்து தந்த வியூகத்தை நீங்க முழுமையா செயல்படுத்தலையா என்ற, 'டவுட்'கள் எழுதே... ஆளுங்கட்சி மாதிரி, நீங்களும் சரியான தேர்தல் வியூக நிபுணரை தேடி பிடிக்கணும்!