PUBLISHED ON : டிச 20, 2025 02:57 PM

காஷ்மீர் பள்ளத்தாக்கின் கலாச்சாரம் மற்றும் உணவோடு பின்னிப் பிணைந்த ஒரு முக்கியமான விளைபொருள் தாமரைத் தண்டு ஆகும். இதனை உள்ளூர் மொழியில் 'நத்ரூ' என்பர்.
ஸ்ரீநகரின் சௌரா பகுதிக்கு அருகில் அமைந்துள்ள அஞ்சார் ஏரி, நத்ரூ சாகுபடிக்கு மிகவும் புகழ்பெற்றது. தால் ஏரிக்கு அடுத்தபடியாக அதிக அளவில் நத்ரூ இங்குதான் விளைவிக்கப்படுகிறது. காஷ்மீரி மக்களால் மிகவும் விரும்பப்படும் இந்த நத்ரூ, ஒரு விலையுயர்ந்த மற்றும் சுவையான காய்கறியாகக் கருதப்படுகிறது.



ஒரு காலத்தில் மிகத் தெளிவாக இருந்த அஞ்சார் ஏரி, இன்று கழிவுகள் கொட்டப்படுவதால் சுருங்கி வருகிறது. இதனால் நத்ரூ விளைச்சல் பெருமளவு குறைந்துள்ளதோடு, தரம் மற்றும் சுவையும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். 2014-ல் ஏற்பட்ட பெரும் வெள்ளத்திற்குப் பிறகு நத்ரூ விளைச்சல் முழுமையாக அழிந்து, பின் மெதுவாக மீண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சுருக்கமாகச் சொன்னால், 'நத்ரூ' என்பது வெறும் உணவு மட்டுமல்ல, காஷ்மீர் மக்களின் கடின உழைப்பு மற்றும் பாரம்பர்யத்தின் அடையாளம்.
-எல்.முருகராஜ்.

