PUBLISHED ON : ஜூலை 30, 2024 12:00 AM

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், அமெரிக்க துணை அதிபருமான கமலா ஹாரிஸ்: குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளரான டொனால்டு டிரம்ப், தன் பிரசார கூட்டங்களில் என்னை பற்றி மிகவும் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதில் இருந்தே, அவர் என்னைப் பார்த்து பயப்படுகிறார்; தோல்வி பயத்தில் பேசுகிறார் என்பது தெரிகிறது.
டவுட் தனபாலு: டிரம்ப் எப்பவுமே காரசாரமா பேசுறவர் தான்... இருந்தாலும் அவர் பேச்சில் இப்ப கொஞ்சம் ஓவர் டோஸ் இருப்பதா சொல்றீங்க... ஒருவேளை சமீபத்தில் இந்தியாவில் தேர்தல் நடந்ததால், அமெரிக்காவில் தேர்தலை எதிர்கொள்ள நம்மூர் அரசியல்வாதிகளிடம் டிரம்ப் ஏதாவது டியூஷன் படிச்சிருப்பாரோ என்ற 'டவுட்' தான் வருது!
தமிழக உயர்க்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி: ஒரே ஒரு செங்கல்லை வைத்து, தமிழக சட்டசபை தேர்தல் முடிவை ஒட்டுமொத்தமாக மாற்றிக் காட்டியவர் உதயநிதி. தேர்தல் பிரசாரத்தில் திறமை வாய்ந்தவர். தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து உதயநிதி கருத்து கேட்க உள்ளார். தி.மு.க., கூட்டணி, 2026 சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
டவுட் தனபாலு: அதெல்லாம் சரி... உதயநிதி சீனியர்களுக்கு, 'ரிடையர்மென்ட்' கொடுத்துட்டு, இளைஞர்களுக்கு முக்கியத்துவம் தருவார்னு பேச்சு அடிபடுதே... ஒருவேளை அப்படி எதுவும் நடந்தால், 234 தொகுதிகளில் தி.மு.க., ஜெயித்தாலும், அதில் ஒருவராக உங்களால் இருக்க முடியுமா என்பது 'டவுட்' தான்!
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்: மனிதன் உயிர் வாழ, உடலுக்கு ரத்த ஓட்டம் எவ்வளவு முக்கியமோ, அதேபோல் தமிழக பொருளாதாரத்துக்கு லாரி தொழில் முக்கியம். முதல்வர் ஸ்டாலின் தமிழக பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில் செயல்படுகிறார். அதற்கு லாரி தொழில் மிகவும் உறுதுணையாக உள்ளது.
டவுட் தனபாலு: நீங்க சொல்றது உண்மை தான்... ஆனால், பொருளாதாரத்துக்கு கைகொடுக்கும் லாரி உரிமையாளர்களுக்கு, தி.மு.க., தேர்தல் வாக்குறுதிபடி டீசல் விலையை குறைக்காமல், சாலை வரி, சுங்க வரியை உயர்த்தி, அவங்க தொழிலை நசுக்கும் வகையில் தான் இந்த அரசு செயல்படுது என்பதில் 'டவுட்'டே இல்லை!