PUBLISHED ON : ஆக 06, 2024 12:00 AM

நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: புரட்சி பெண்கள் திட்டம் என்று கூறி, மாதந்தோறும் 1,000 ரூபாய் கொடுக்கின்றனர். அதற்கு, வறட்சி பெண்கள் திட்டம் என்று பெயர் வைத்திருக்க வேண்டும். தமிழ் புதல்வன் திட்டம் என்று கூறி, மாணவர்களுக்கு 1,000 ரூபாய் கொடுக்க உள்ளனர். இளைஞர்களின் ஓட்டுகள் திசை மாறி விட்டதால், இந்த முடிவை எடுத்துள்ளனர்.
டவுட் தனபாலு: இளைஞர்களின் ஓட்டுகள் பெரும்பாலும் உங்க கட்சிக்கு தான் வந்திருக்கும்... அவங்களை, 1,000 ரூபாய் கொடுத்து வளைக்க பார்க்கிறதால, உங்களது வாக்குறுதியான, 'ஆடு மேய்ப்பை அரசு வேலையாக்குவேன்' என்பதெல்லாம், அடுத்த தேர்தல்ல எடுபடுவது, 'டவுட்'தான்!
பத்திரிகை செய்தி: புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் பகுதியில், முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, பன்னீர்செல்வம், பழனிசாமி மற்றும் சசிகலா படத்துடன், 'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. ஒன்று சேருவீங்களா, மாட்டீங்களா...' என்ற வாசகத்துடன் அ.தி.மு.க., தொண்டர் மைதீன் என்பவர் பேனர் வைத்துள்ளார். 'கோடான கோடி அ.தி.மு.க., தொண்டர்களின் கேள்வி' என்ற தலைப்பில் மேற்கண்ட வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
டவுட் தனபாலு: அது சரி... கோடானு கோடி தொண்டர்களின் கேள்வின்னா, திருத்தணி துவங்கி குமரி வரை பேனர் மயமா இருக்கணுமே... அதனால, 'ஒன்று சேரணும்'னு அடிக்கடி கோரஸ் பாடுற பன்னீர்செல்வம் தரப்பினரின் பங்களிப்பு இந்த பேனரின் பின்னணியில இருக்குமோ என்ற, 'டவுட்'தான் வருது!
ம.தி.மு.க., பொதுக்குழு தீர்மானம்: டாஸ்மாக் மதுக் கடைகளை அரசு படிப்படியாக மூட வேண்டும். பின், குஜராத், பீஹார் போல, முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் குக்கிராமங்கள் வரை பரவி வரும் போதை பொருள் கலாசாரத்தை ஒழிக்க வேண்டும். மத்திய பட்ஜெட்டில், தமிழக திட்டங்களுக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து, வரும் 14ம் தேதி, அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
-டவுட் தனபாலு: டாஸ்மாக் கடைகள், போதை பொருட்களை ஒழிக்க வலியுறுத்தியும் ஒரு போராட்டத்தை நடத்தினா, உங்க கட்சிக்கு பெண்கள் மத்தியில பேராதரவு பெருகுமே... ஆனா, ஆளுங்கட்சி ஆதரவு மட்டும் போதும்னு அடக்கி வாசிப்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!