PUBLISHED ON : ஆக 14, 2024 12:00 AM

பா.ஜ., லோக்சபா எம்.பி., கங்கனா ரணாவத்: ராகுல் மிகவும் ஆபத்தான மனிதர்.அவர் கொடிய விஷம் போன்றவர். அவரால் பிரதமராகமுடியாவிட்டால், இந்த நாட்டையும் அழித்து விடுவார். வாழ்நாள் முழுதும் ராகுல் எதிர்க்கட்சி வரிசையில் தான் இருப்பார். மக்கள் அவரை தலைவராக்க மாட்டார்கள்.
டவுட் தனபாலு: நீங்க இப்படி கரிச்சு கொட்டுற ராகுலை தான், ஆளுங்கட்சியின் தவறுகளை தட்டிக் கேட்க வேண்டிய எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தில் மக்கள் அமர்த்தியிருக்காங்க... ராகுலை விமர்சித்தால் தான், பா.ஜ.,வில் இன்னும் பல உயரங்களை தொட முடியும் என்ற உங்களது உள்ளக்கிடக்கை, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
பெங்களூரில் உள்ள இந்தியன்இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் நிறுவனத்தின் ஆய்வக விஞ்ஞானிராமசந்திரா: மேகதாது அணை திட்டத்தால், 12,355 ஏக்கர் வனப்பகுதி நாசமாகும். இந்தளவு வனப்பகுதிக்கு, 100 டி.எம்.சி., தண்ணீரைசேகரிக்கும் திறன் உள்ளது.இவ்வளவு தண்ணீர்சேகரிக்கும் வனப்பகுதியை அழித்து, சிமென்ட் அணை கட்டி 45 டி.எம்.சி., நீரை சேகரிப்பதாக கூறுவதில் அர்த்தம் உள்ளதா?
டவுட் தனபாலு: தங்களது மாநிலத்துல, 12 ஆயிரத்து சொச்சம் வனப்பகுதி நாசமானாலும் பரவாயில்லை... மழை பெய்து இப்ப திறக்கிற உபரி நீரையும் தமிழகத்துக்கு திறந்து விடக்கூடாது என்பதற்காகவே, மேகதாது அணையை பிடிச்சு கர்நாடக அரசியல்வாதிகள் தொங்கிட்டு இருக்காங்க என்பதை, 'டவுட்'டே இல்லாம விளக்கிட்டீங்க!
பத்திரிகை செய்தி: இயற்கை பேரழிவு, பெரிய விபத்து போன்ற சம்பவங்கள் குறித்து செய்தி வெளியிடும் போது, பார்வையாளர்கள் பீதி அடையாமல் இருக்க, அது தொடர்பான காட்சிகளில், தேதி மற்றும் நேரத்தை குறிப்பிடும்படி, தனியார் செய்தி சேனல்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
டவுட் தனபாலு: அருமையான உத்தரவு... அதேபோல, சமூக வலைதளங்கள்லயும் எப்பவோ நடந்த இயற்கை பேரழிவுகளை இப்ப நடந்தது போல சித்தரித்து, 'நெட்டிசன்'களை பீதிக்குள்ளாக்கும் பேர்வழிகளுக்கும் கடிவாளம் போட நடவடிக்கை எடுத்தால், 'டவுட்'டே இல்லாம மத்திய அரசை பாராட்டலாம்!

