PUBLISHED ON : ஆக 21, 2024 12:00 AM

தமிழக காங்., தலைவர் செல்வப் பெருந்தகை: 'முல்லை பெரியாறு அணை பாதுகாப்பானதாக இல்லை. அருகில் புதிய அணை கட்ட வேண்டும். இனியும் கேரளாவால் கண்ணீரில் மூழ்கியிருக்க முடியாது' என, மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி பேசி, இடுக்கி மாவட்ட மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியிருக்கிறார். மாநில உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் முதல்வர்ஸ்டாலின், சுரேஷ் கோபியின் கருத்தை பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
டவுட் தனபாலு: இப்ப தான் கருணாநிதிக்கு நாணயம் வெளியிட்டு, மத்திய அரசு சிறப்பு செய்திருக்கு... இந்த நேரத்தில், சுரேஷ் கோபியின் கருத்தை, முதல்வர் கண்டுக்குவாரா என்பது, 'டவுட்'தான்!
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: கருணாநிதிக்கு 100 ரூபாய் நாணயம் வெளியிட்டதற்கு, மத்திய அரசுக்கு முதல்வர் நன்றி சொல்கிறார். தி.மு.க., - பா.ஜ.,விற்கு கொள்கை மாறுபாடு கிடையாது. தி.மு.க., எதிர்க்கட்சியாக இருக்கும்போது, 'கோ பேக் மோடி' என்றனர்.இப்போது, வெள்ளை குடையுடன் வரவேற்கின்றனர்.
டவுட் தனபாலு: கடந்த 10 வருஷமா காங்கிரசுடன் பயணித்து, எந்த பிரயோஜனமும் இல்லை... சந்திரபாபு நாயுடு, நிதீஷ் குமாருக்கு மத்திய அரசு தரும் முக்கியத்துவத்தையும், அந்த மாநிலங்களுக்கு வழங்கப்படும் தாராள நிதியுதவியையும் பார்த்துட்டு, தி.மு.க.,வுக்கும் மாற்று யோசனைவந்துடுச்சோ என்ற, 'டவுட்' தான் வருது!
தமிழக முதல்வர் ஸ்டாலின்: கருணாநிதி நாணயம் வெளியீட்டுவிழாவில் பங்கேற்ற மத்தியராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், 'அரங்கத்தில் உள்ள அத்தனைபேரும் எழுந்து நின்று, கருணாநிதிக்கு மரியாதை செலுத்துங்கள்' என கூறி, எங்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தார். தி.மு.க.,வினரும், கூட்டணி கட்சி தலைவர்களும் பேசினால் எப்படி பேசுவரோ, அதைவிட அதிகமாக, கருணாநிதி குறித்து ராஜ்நாத் சிங் பேசியது, வரலாற்றில் பொறிக்கத்தக்கது.
டவுட் தனபாலு: உங்க கூட்டணியில் ஏழெட்டு வருஷமா இருக்க கட்சிகள், உங்க தந்தையையும்,உங்களையும் புகழந்து தள்ளிட்டுதான் இருக்காங்க...ஆனா,எதிர்முகாம்ல இருக்கிற ராஜ்நாத் சிங் ஒரே நாள்ல, அவங்களை, 'ஓவர்டேக்' பண்ணிட்டு போயிட்டாரே... கூட்டணி கட்சிகள் ஜாக்கிரதையா இருக்கணும் என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!

