PUBLISHED ON : மார் 05, 2026 04:25 PM

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பில் அமைந்துள்ளது பழமையும் பெருமையும் மிக்க அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் திருக்கோயில். கலை நயம் மிக்க கல் மற்றும் வெண்கலச் சிலைகள் இக்கோயிலின் பெரும் பொக்கிஷங்களாகும். அத்தகைய அரிய வெண்கலச் சிலைகளுள் ஒன்றுதான் திருமங்கை ஆழ்வார் சிலை.


2019-ஆம் ஆண்டு, லண்டன் அருங்காட்சியகத்திற்குச் சென்ற சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட விஜயகுமார் என்பவரது பார்வையில் இச்சிலை தட்டுப்பட்டது. சிங்கப்பூரில் கப்பல் போக்குவரத்து நிறுவனத்தில் பொது மேலாளராகப் பணியாற்றும் இவர், கடத்தப்பட்ட இந்தியச் சிலைகளை மீட்கும் பணியைத் தன்னார்வத்துடன் செய்து வருகிறார்.
அவர் தனது தரவுத்தளத்தில் இருந்த, 1957-ஆம் ஆண்டு புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தால் எடுக்கப்பட்ட தாடிக்கொம்பு கோயில் புகைப்படங்களுடன் லண்டனில் இருந்த சிலையை ஒப்பிட்டுப் பார்த்தார். சிலையின் நுணுக்கமான வேலைப்பாடுகள், பீடத்தின் அடையாளங்கள் மற்றும் வாளின் அமைப்பு ஆகியவை நூறு சதவீதம் ஒத்துப்போவதை உறுதி செய்து, ஆதாரங்களைச் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு அனுப்பினார்.
தமிழகச் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு மற்றும் இந்தியத் தூதரகம் வழங்கிய வலுவான ஆதாரங்களை ஏற்றுக்கொண்ட ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், சிலையைத் திருப்பித் தர ஒப்புக்கொண்டது. இதன் அடிப்படையில், நேற்று லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் நடைபெற்ற அதிகாரப்பூர்வ விழாவில், அருங்காட்சியக அதிகாரிகள் சிலையை இந்தியத் தூதர் விக்ரம் துரைசாமியிடம் முறைப்படி ஒப்படைத்தனர்.
திருமங்கை ஆழ்வார் என்ற தங்கள் ஊர் பொக்கிஷத்தை வரவேற்கத் தாடிக்கொம்பு பக்தர்களும் தமிழக மக்களும் இப்போது முதலே மிகுந்த ஆவலுடன் தயாராகி வருகின்றனர்.
- எல். முருகராஜ்

