PUBLISHED ON : ஏப் 02, 2026 06:52 PM

'கொஞ்சி விளையாடும் ஒரு குழந்தையின் சத்தம் கேட்காத தேசம் செத்துக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.'
இன்று லெபனானின் ஹஸ்மியே வீதிகளிலும், காசாவின் இடிபாடுகளுக்கு இடையிலும் கேட்கும் குழந்தைகளின் அழுகுரல், வெறும் கண்ணீர் துளிகள் அல்ல; அவை ஒரு தலைமுறையின் சிதைந்து போன ஆன்மாவின் கதறல். போர் என்பது வெறும் நிலப்பரப்பைக் கைப்பற்றுவது மட்டுமல்ல, அது ஒரு குழந்தையின் எதிர்காலத்தையே வேரோடு பிடுங்கி எறிவதாகும்.
பள்ளிக்கூடம் சென்று படிக்க வேண்டிய வயதில், ஏவுகணைகளின் சத்தத்தைக் கொண்டு அதன் வகையைக் கண்டறியும் கொடுமைக்கு ஆளாகியிருக்கிறார்கள் மேற்காசியக் குழந்தைகள். கைகளில் வண்ணத்துப் பூச்சிகளையும் பொம்மைகளையும் ஏந்த வேண்டிய பிஞ்சு விரல்கள், இன்று தங்கள் உடைந்த வீட்டின் செங்கற்களையும், போரில் பிரிந்த பெற்றோரின் புகைப்படங்களையும் இறுகப் பற்றிக் கொண்டிருக்கின்றன.
உடல் காயங்களை மருந்தால் குணப்படுத்திவிடலாம். ஆனால், 'போர் அதிர்ச்சி' எனும் மனக்காயம் அத்தனை எளிதில் ஆறாது. குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டால் இன்றும் பல குழந்தைகள் பயத்தில் சிறுநீர் கழிப்பதும், பேசும் திறனை இழப்பதும் தொடர்கதையாகி வருகிறது. அவர்கள் வரைந்து பழகும் ஓவியங்களில் சூரியனோ, மழையோ இருப்பதில்லை; மாறாக ரத்தமும், கறுப்புப் புகையும், துப்பாக்கிகளுமே நிறைந்திருக்கின்றன.
போர் ஒரு குழந்தையை அதன் வயதிற்கு மீறிய முதிர்ச்சிக்குத் தள்ளுகிறது. தன் தம்பியைத் தூக்கிக்கொண்டு இடிபாடுகளில் ஓடும் ஒரு சிறுவன், விளையாட வேண்டிய வயதிலேயே ஒரு குடும்பத் தலைவனாக மாறிவிடுகிறான். அவனது சிரிப்பு தொலைந்து போகிறது; அவனது கனவுகள் மண்ணோடு மண்ணாகின்றன.
லெபனானில் இன்று ஒரு அடுக்குமாடி குடியிருப்பு இடிந்தபோது, அதன் அருகே அமர்ந்து அழுத அந்தச் சிறுமியின் கண்ணீர், இந்த உலகிற்கு விடுக்கும் எச்சரிக்கை இதுதான்: 'உங்கள் அதிகாரப் போட்டிகளுக்கு எங்களின் இளமையைப் பலி கொடுக்காதீர்கள்.'
துப்பாக்கிக் குழல்கள் அமைதியடைந்து, குண்டுச் சத்தங்களுக்குப் பதில் குழந்தைகளின் கலகலப்பான சிரிப்பொலி அந்தத் தேசங்களில் மீண்டும் என்று கேட்கிறதோ, அன்றுதான் இந்த உலகம் உண்மையான நாகரிகத்தை அடைந்ததாகக் கருதப்படும்.
-எல்.முருகராஜ்

