தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நிஜக்கதை/'மோதிரம்' பொன்னுசாமி!

'மோதிரம்' பொன்னுசாமி!

'மோதிரம்' பொன்னுசாமி!


PUBLISHED ON : மார் 25, 2026 09:55 PM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 25, 2026 09:55 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேர்தல் களம் என்றாலே விதவிதமான வேஷங்களும், வினோதமான நேர்த்திக்கடன்களும் அரங்கேறுவது வழக்கம். ஆனால், இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலக வாசலில் தென்பட்ட ஒரு காட்சி, அங்கிருந்த தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை அனைவரையும் 'கண் இமைக்காமல்' பார்க்க வைத்தது. காரணம் - ஒரு மனிதர், கை விரல்களில் ரோடு போடப் பயன்படுத்தும் 'ரோலர்' சைஸில் பிரம்மாண்ட தங்க மோதிரங்களுடன் வலம் வந்ததுதான்!

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்த விவசாயியான பொன்னுசாமி, எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்த காலத்திலிருந்தே தீவிர விசுவாசி. இவரது பக்தி வெறும் கோஷத்தோடு நிற்கவில்லை; அது மோதிரங்களாக உருமாறியது.Image 1553838முதலில் 'ஆயிரத்தில் ஒருவன்' பட ஸ்டைலில் ஒரு 10 பவுன் மோதிரத்தைப் போட்டார். 'என்னப்பா இன்னும் எம்.ஜி.ஆரை நடிகராகவே பார்க்கிறாயே?' என்று யாரோ கேட்க, 'அப்படியா சங்கதி?' என அடுத்த சில நாட்களில் முதல்வர் எம்.ஜி.ஆர் படம் போட்ட இன்னொரு 10 பவுன் மோதிரத்தை மாட்டிக்கொண்டார்.

அடுத்து ஜெயலலிதா பொறுப்புக்கு வந்ததும், அவருக்கும் ஒரு 10 பவுன். அது 'நடிகை' ஜெயலலிதா படமாக இருக்கிறதே என்ற விமர்சனம் வந்ததும், 'அதற்கென்ன... இதோ பாருங்கள்' என 'முதல்வர்' ஜெயலலிதா படத்துடன் 11 பவுன் மோதிரத்தை இறக்கினார்.

இவரது இந்த 'நகைக்கடை' பக்தியைப் பார்த்து ஒருமுறை ஜெயலலிதாவே இவரை 'மோதிரம் பொன்னுசாமி' என்று அழைத்துத் தட்டிக்கொடுக்க, அன்று முதல் பொன்னுசாமி, 'மோதிரம் பொன்னுசாமி'யாகவே புரமோஷன் ஆகிவிட்டார்.

'எல்லாம் சரிப்பா... அண்ணாவை விட்டுட்டியே?' என்று யாரோ கிளப்பிவிட, அடுத்த வாரமே அண்ணா உருவம் பொறித்த மோதிரமும் விரலில் ஏறியது. இப்போது இவரது கைகளைத் தூக்கினால், அதிமுகவின் மொத்த சரித்திரமுமே ஜொலிக்கிறது.

சாப்பிடும்போதும், தூங்கும்போதும் மட்டும் இந்த 'கனரக' மோதிரங்களைக் கழற்றி வைப்பாராம். மற்ற நேரங்களில் இதுதான் இவரது அடையாளம். இவ்வளவு எடை கொண்ட மோதிரங்களால் இதுவரை எந்தப் பாதிப்பும் தனக்கும் மோதிரங்களுக்கும் வந்ததில்லை என்கிறார்.

தற்போது கிளைச் செயலாளராக இருக்கும் பொன்னுசாமிக்கு ஒரு ஆசை. அது, இந்த முறை ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ சீட் வாங்கிவிட வேண்டும் என்பதுதான். இதற்காகத் தலைமை அலுவலகத்தில் மனு போட்டுவிட்டு, நம்பிக்கையுடன் வலம் வருகிறார்.

'இவர் தொகுதிக்குப் போய் பிரச்சாரமே பண்ண வேண்டாம்; வீதி வீதியாகப் போய் ஒரு 'கும்பிடு' போட்டாலே போதும், அந்தத் தங்கத்துல ஜொலிக்கிற சின்னங்களைப் பார்த்துட்டு மக்கள் ஓட்டு போட்டுடுவாங்க!' என்று தொண்டர்கள் பேசிக்கொள்கின்றனர்.

வாய்ப்பு கிடைக்குமா? அல்லது இந்த முறையும் 'மோதிரம்' மட்டுமே மிஞ்சுமா என்பது தலைமைக்கே வெளிச்சம்!

-எல்.முருகராஜ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us