PUBLISHED ON : ஆக 26, 2024 12:00 AM

நடிகர் ரஜினிகாந்த்: நான் நடித்த, சிவாஜி படம் அரசியல்வாதிகளை, அரசை விமர்சித்து எடுக்கப்பட்டது... அந்த படத்தின் கதை தெரிந்திருந்தும், அந்த படத்தை கருணாநிதி வந்து பார்த்தார். படம் முடிந்த பின், 'நமக்கும் நல்லது செய்ய ஆசை தான்' எனக் கூறி, பெருமூச்சு விட்டார். அதில், பல ஆயிரம் விஷயங்கள் இருந்தன.
டவுட் தனபாலு: இதுல இருந்து சமூகத்துக்கு என்ன சொல்ல வர்றீங்க... 'கருணாநிதிக்கு நல்லது செய்யணும்னு ஆசை இருந்துச்சு... ஆனா, சுத்தி இருந்தவங்க, அவரை நல்லது செய்ய விடலை'ன்னு, தி.மு.க., தலைவர்களை குத்தி காட்டுறீங்களோ என்ற, 'டவுட்' வருது!
பா.ஜ.,வை சேர்ந்த, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா: ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் சந்தித்த பாகுபாட்டை, மோடி அரசு முடிவுக்கு கொண்டு வந்தது. காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ள தேசிய மாநாட்டு கட்சி, தேர்தல் வாக்குறுதியில் இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறது. ராகுல் இதை ஆதரிக்கிறாரா?
டவுட் தனபாலு: தேசிய மாநாட்டு கட்சியின் கொள்கைகளை எல்லாம் ராகுல் ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லையே... உங்க கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கும் கட்சிகள் எல்லாம், உங்களது கொள்கைகளை ஏற்று தான் கூட்டணியில் இருக்காங்களா என்ற, 'டவுட்' வருதே!
நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமையில் கைது செய்யப்பட்ட சிவராமன், குற்ற உணர்வால் இறந்துள்ளார். அவரது சாவில் எந்த மர்மமும் இல்லை. அவர் வருத்தம் தெரிவித்து, எனக்கு கடிதம் எழுதினார். அதில், 'நான் சாகப் போகிறேன்; என்னை மன்னித்து விடுங்கள்' என்று கூறியிருந்தார். என்னவென்று விசாரியுங்கள் என தம்பிகளிடம் கூறியிருந்தேன். தான் செய்தது தவறு என்று தெரிந்து தான் அந்த முடிவு எடுத்துள்ளார்.
டவுட் தனபாலு: 'சாக போகிறேன்'னு உங்களுக்கு சிவராமன் கடிதம் எழுதியதா சொல்றீங்க... தற்போதுள்ள, தகவல் தொடர்பு யுகத்துல, அடுத்த நொடியே, உங்க கட்சியினரை தொடர்பு கொண்டு பேசி, அவரது மரணத்தை தடுத்து நிறுத்தியிருக்கலாமே... சிவராமனால, கட்சிக்கு கெட்ட பெயர்னு கருதி, கமுக்கமா இருந்துட்டீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!

