PUBLISHED ON : செப் 13, 2024 12:00 AM

தமிழக காங்., தலைவர் செல்வபெருந்தகை: பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு நாள் நிகழ்ச்சிக்கு வந்த காங்., தலைவர்களை நிற்க வைத்து, போலீசார் சிறை பிடித்தது ஏற்றுக்கொள்ள முடியாது. என்னை போன்ற தலைவர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றால், மக்களின் நிலை என்ன? இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு அனாதை போல தனியாக வந்து போக முடியாது. இனி வரும் காலங்களிலாவது, போலீசார் சரியாக செயல்பட வேண்டும்.
டவுட் தனபாலு: ஆளுங்கட்சி கூட்டணியில இருக்கிற திருமாவளவன், மது ஒழிப்பு மாநாட்டுக்கு அ.தி.மு.க.,வுக்கு அழைப்பு விடுக்கிறாரு... நீங்க, முதல்வர் வசம் இருக்கிற போலீசாரை திட்டுறீங்க... தி.மு.க., கூட்டணிக்குள்ள என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது என்பது மட்டும், 'டவுட்'டே இல்லாம தெரியுது!
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: வி.சி., கட்சி சார்பில் போதை ஒழிப்பு மாநாடு, உளுந்துார்பேட்டையில் அக்., 2ல் நடக்கிறது.இளைய சமுதாயத்தை சீரழிக்கும்மதுவை ஒழிப்பது தான் எங்களின் நோக்கம். அதற்காககட்சி, அரசியல் கடந்து, ஜனநாயக சக்திகளின் துணையோடு போராட உள்ளோம். நாடு முழுதும் மதுவிலக்கை கொண்டுவர வேண்டும்.அதற்கான பொறுப்பு, வி.சி.,கட்சிக்கு மட்டுமல்ல... கூட்டணிகட்சியான தி.மு.க.,வுக்கும்,அ.தி.மு.க.,வுக்கும், இந்தியாவைஆளும் பா.ஜ.,வுக்கும் உள்ளது.
டவுட் தனபாலு: நல்ல விஷயம்தான்... அந்த மாநாட்டுலயே,'தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் கட்சியுடன் தான், அடுத்த தேர்தலில்வி.சி., கூட்டணி அமைக்கும்'என்ற தீர்மானம் ஒன்றையும்நிறைவேற்றினால், 'டவுட்'டே இல்லாம தங்களை பாராட்டலாம்!
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் கட்சி, சின்னம் இல்லாமல் சுயேச்சையாக போட்டியிட்டு, 3 லட்சத்து 42,000 ஓட்டுகள் வாங்கியுள்ளேன். இந்தியாவில் லோக்சபா தேர்தலில், 33.5 சதவீதம்ஓட்டு வாங்கிய சுயேச்சை நான் தான். இதுவே, அ.தி.மு.க.,தொண்டர்கள் எங்கள்பக்கம் இருப்பதை காட்டுகிறது. அ.தி.மு.க.,வை மீட்டெடுக்கதர்மயுத்தம் தொடரும்.
டவுட் தனபாலு: அது சரி... 33.5 சதவீதம் ஓட்டுகளும் தனிப்பட்ட பன்னீர்செல்வத்துக்கு கிடைச்சதுதானா... நீங்க கூட்டணி வச்சிருந்த பா.ஜ.,வுக்கு இந்த 3.42 லட்சம் ஓட்டுகள்ல எந்த பங்கும் இல்லையா என்ற, 'டவுட்' வருதே!

