PUBLISHED ON : ஜன 14, 2026 03:55 AM

தி.மு.க., செய்தி தொடர்புக்குழு துணை தலைவர் மருது அழகுராஜ் அறிக்கை:
அ.தி.மு.க., சந்தித்த முதல் தேர்தல் துவங்கி, ஒன்பது தேர்தல்களில் எம்.எல்.ஏ.,வாக வென்ற செங்கோட்டையன், அ.தி.மு.க., அரசில், 10 முறை பட்ஜெட் போட்டு நிதி அமைச்சராகவும், மூன்று முறை முதல்வராகவும் இருந்த பன்னீர்செல்வம், 33 ஆண்டுகள் அ.தி.மு.க.,வையே சுவாசித்து வாழ்ந்த சசிகலா ஆகியோரை, திட்டமிட்டு நம்ப வைத்து அழித்த பா.ஜ., இப்போது பழனிசாமியை பிணை கைதியாக்கி, வரும் சட்டசபை தேர்தலோடு அ.தி.மு.க.,வுக்கு மொத்தமாக முடிவுரை எழுதப் போகிறது.
அ.தி.மு.க.,வுக்கு முடிவுரை எழுதி பா.ஜ., வளர்ந்துட்டா, தி.மு.க.,வுக்கு மொத்தமா முற்றும் போட்டுரும்னு பயப்படுறாரோ?
தி.மு.க., இளைஞரணி செயலரும், துணை முதல்வருமான உதயநிதி பேச்சு:
தமிழ் என்ற அடையாளத்துக்கு முன்னால், வேறு எந்த அடையாளமும் நிற்க முடியாது; போட்டி போட முடியாது. ஜாதி, மதம், பணக்காரன், ஏழை, முதலாளி, தொழிலாளி, ஆண், பெண் என்று எல்லா பேதங்களையும் தாண்டி, நம் அனைவரையும் இணைத்திருப்பது நம் தாய் மொழி தமிழ். அப்படி நாம் அனைவரும் தமிழால் இணைந்ததால் தான், இன்றைக்கு உலகை வென்று கொண்டிருக்கிறோம்.
தமிழ் மொழி மீதான உங்க பற்றை பாராட்டுறோம்... ஆனா, கட்சியில் உங்களுக்கு கிடைக்கும் மரியாதை, அந்தஸ்து, கட்சியில் உங்களை வீட சீனியரான உங்க அத்தை கனிமொழிக்கு கிடைக்குதா?
அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை: 'உங்கள் கனவை சொல்லுங்கள்' என்ற புதிய திட்டத்தை முதல்வர் துவங்கியுள்ளார். 2021 சட்டசபை தேர்தலில் அளித்த, 311வது தேர்தல் வாக்குறுதியின்படி, 'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தொடர்ச்சியாக போராடி வரும் இடைநிலை ஆசிரியர்களின் கனவை நிறைவேற்றக் கூடாதா முதல்வர் ஸ்டாலின் அவர்களே?
திட்டங்களுக்கு, புதுசு புதுசா பெயர் வைப்பதில் காட்டும் அக்கறையை, கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் காட்ட மாட்டேங்கிறாங்களே
தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பேட்டி: 'கோவில் நிலத்தில் ஹிந்துக்கள் தீபம் ஏற்றினால் குற்றம் என்று சொல்வோர், அதே கோவில் நிலத்தில், முஸ்லிம்களின் சந்தனக்கூடு விழாவிற்கு கொடியேற்றினால் குற்றமில்லையா' என, நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் கேட்டுள்ளார். ஆனால், தமிழக அரசியல்வாதிகள் யாரும் இதுகுறித்து தங்கள் கருத்தை சொல்லாமல் இருக்கும் மர்மத்தின் பெயர்தான் போலி மதச்சார்பின்மை.
'நீதிபதியின் கேள்வி சரிதான்'னு சொல்லிட்டா, போலி மதச்சார்பின்மைவாதிகளின் ஓட்டு வங்கியில் ஓட்டை விழுந்துடுமே!

