PUBLISHED ON : பிப் 22, 2025 12:00 AM

மா.கம்யூ., மாநில செயலர் சண்முகம்: துாத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில், கடந்த பல ஆண்டுகளாக நடந்துள்ள சட்டவிரோத தாது மணல் கொள்ளை பற்றிய வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட கடற்கரை மணலுக்காக, ராயல்டி மற்றும் அபராதமாக மட்டும், 5,832 கோடியே 29 லட்சம் ரூபாய் வசூலிக்க உத்தரவிட்டுள்ளனர். தாது மணல், கனிமவளத் தொழில்களை அரசுடைமையாக்க வேண்டும்.
டவுட் தனபாலு: தாது மணல், கனிவள தொழில்களை அரசுடைமை ஆக்கிடலாம் தான்... ஆனா, தேர்தலின்போது உங்களுக்கு சில 'சீட்'களுடன், தேர்தல் செலவுக்கு 15 கோடி முதல் 20 கோடி ரூபாய் பணத்தை ஆளுங்கட்சியால தர முடியுமா என்பது, 'டவுட்'தான்!
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: திராவிடம் பேசாமல்தான், என் கட்சியை அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக வளர்த்திருக்கிறேன். ஆட்சி அதிகாரத்தில் இருந்த பெரிய பெரிய கட்சிகளெல்லாம் கூட்டணிக்கு வருந்தி வருந்தி அழைத்தன; ஆனால், கொள்கைக்காக யாரோடும் கூட்டணி சேரவில்லை. அந்த கொள்கை அடிப்படையில் த.வெ.க.,வுடனும் கூட்டணி கிடையாது.
டவுட் தனபாலு: கரகாட்டக்காரன் படத்துல நடிகர் கவுண்டமணி, 'அமெரிக்காவுல மைக்கேல் ஜாக்சன் கூப்பிட்டாக; ஜப்பான்ல ஜாக்கி சான் கூப்பிட்டாகன்னு கலர் கலரா ரீல் விடாதே'ன்னு காமெடி பண்ணியிருப்பாரு... அதுக்கு துளிகூட குறைவில்லாம இருக்குது, நீங்க சொல்ற இந்த கூட்டணி கதையும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக சட்டத்துறை அமைச்சர்ரகுபதி: பாலியல் புகார்களை வைத்து, அரசின் மீது அவதுாறு பரப்புவதே, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு தொடர்கதையாகி விட்டது. புகார் வந்ததும் விரைவாக விசாரித்து கைது நடவடிக்கை எடுக்கிறது போலீஸ் துறை. ஆனால், பாதுகாப்பில்லை என சொல்லி, பெண் குழந்தைகளை அச்சுறுத்துகிறார் பழனிசாமி.
டவுட் தனபாலு: புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கிறது உங்க கடமை... ஆனா, புகாரே வராம, அதாவது, 'பாலியல் குற்றங்களே நடக்காம தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க தவறிடுச்சு'ன்னு தானே, பழனிசாமி சொல்றாரு... பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டை பாக்குக்கு விலை சொல்றீங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!

