PUBLISHED ON : பிப் 26, 2025 12:00 AM

அ.தி.மு.க., பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன்:அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தான் கூட்டணி குறித்து முடிவெடுப்பார். கூட்டணி தொடர்பாக என்ன வியூகம் உள்ளது என்பது குறித்து, அவருக்கு மட்டுமே தெரியும். கட்சியின் மற்ற தலைவர்களுக்கு தெரிந்தாலும், அதை வெளியில் சொல்லக் கூடாது.
டவுட் தனபாலு: ஏற்கனவே, 'கூட்டணிக்கு வர்றவங்க 10 சீட்டும்,15 - 20 கோடி ரூபாய் பணமும் கேட்கிறாங்க'ன்னு வாயை விட்டு, வாங்கி கட்டிக்கிட்டதை மறக்காம இருக்கார் போலும்... அதான், இந்த முறை கூட்டணி பத்தி பிடி கொடுக்காம பேசுறார் என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
மயிலாடுதுறை தொகுதி காங்., - எம்.பி., சுதா: கும்பகோணத்தில்நடந்த கூட்டத்தில், பா.ம.க., தலைவர் அன்புமணி பேசுகையில், மயிலாடுதுறை தொகுதிக்கு சம்பந்தமில்லாத, சென்னையில் இருந்து யாரோ ஒருவர் எங்கிருந்தோ வந்தார் என்று தெரியாமல் ஓட்டளித்து வெற்றி பெறச் செய்தீர்கள் என,என்னைப் பற்றி கிண்டலாக பேசியுள்ளார்.
டவுட் தனபாலு: அது சரி... அன்புமணியின் மனைவி சவுமியா, தர்மபுரி லோக்சபா தொகுதியில், 2024 தேர்தலில் நின்று தோற்று போயிட்டாங்க... மயிலாடுதுறையில வெளியூர் வேட்பாளரை ஏத்துக்கிட்ட மக்கள், தர்மபுரியில் தன் மனைவியை ஏத்துக்கலையே என்ற ஆதங்கத்தில் அன்புமணி பேசியிருப்பாரோ என்ற, 'டவுட்'தான் வருது!
அ.தி.மு.க., மருத்துவ அணி மாநில இணை செயலர் டாக்டர் சரவணன்: வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., ஆட்சி அமைய, இரவு பகல் பாராமல் சுழன்று வேலை செய்வோம் என்ற உறுதிமொழியை ஜெ., பிறந்த நாளில் எடுத்துள்ளோம். மதுரையில், 10 தொகுதிகளிலும் தி.மு.க., வெற்றி பெறும் என, அமைச்சர் மூர்த்தி சொல்கிறார். கடந்த மூன்று முறை வெற்றி பெற்ற மதுரை மேற்கு தொகுதியில் எங்களின் மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான செல்லுார் ராஜுவை எதிர்த்து போட்டியிட அமைச்சர் மூர்த்தி தயாரா?
டவுட் தனபாலு: அது சரி... 'வர்ற தேர்தல்ல, நாலாவது முறையாகவும் மதுரை மேற்கு தொகுதியில, எங்க அண்ணன் செல்லுார் ராஜு தான் களம் இறங்க போறார்... அந்த தொகுதிக்கு வேற யாரும் சீட் கேட்டு வந்துடாதீங்க'ன்னு அ.தி.மு.க., வினருக்கு சொல்லாம சொல்றாரோ என்ற, 'டவுட்'தான் வருது!

