PUBLISHED ON : மார் 03, 2025 12:00 AM

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்: கடந்த, 15 ஆண்டுகளாக, ஒரு பெண்ணை வைத்து தொடர்ச்சியாக எங்களை கற்பழித்துக் கொண்டு இருக்கிறீர்கள்; என் குடும்பம், என்னை சுற்றியுள்ளவர்கள் என அனைவரையும் பதற வைக்கிறீர்கள்.
டவுட் தனபாலு: இதை... இதை... இதை தான் தி.மு.க.,வும், மற்ற கட்சிக்காரங்களும் எதிர்பார்க்கிறாங்க... உங்களைக் கதறக்கதற ஓடவிட்டு, 'விடுதலைப்புலி பிரபாகரன் அரசியலை இங்கே கிளப்பாதீங்க... வழிக்கு வாங்க'ன்னு பல கட்சிகளும் முயற்சி பண்றாங்க... நீங்க மடியவே இல்லை. எந்த, 'ஸ்விட்சை' போட்டா, 'ஷாக்' அடிக்கும்ன்னு புரிஞ்சு, தி.மு.க., காய் நகர்த்துதுங்கிறது, 'டவுட்' இல்லாம புரியுது!
அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் உதயகுமார்: மின் கட்டணம், சொத்து வரி, கட்டுமான பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து உள்ளதால், மக்களிடம் அதிருப்தியை, தி.மு.க., அரசு பெற்று உள்ளது. இன்றைக்கு முதல்வர் ஸ்டாலினின் கவலை, அவரை, 'அப்பா' என்று அழைக்க வேண்டும் என்பதில் தான் உள்ளது. அதனால், தமிழக மக்கள், 'அய்யோ...' என்று கூறும் அவலக்குரல் அவருக்கு கேட்கவில்லை.
டவுட் தனபாலு: ஏதோ ஒரு ஆதங்கத்துல சொல்லிட்டாரு... உண்மையிலேயே, 'அப்பா'ன்னு யாரும் கூப்பிடலேன்னாலும், தானா சொல்லி திருப்திப்பட்டுக்கிறாரு... உங்க தலைவி ஜெயலலிதா, மருத்துவமனையில படுத்திட்டிருந்தப்ப, செருப்பு போடாம நீங்க விரதம் இருக்கலியா... அது போல ஒரு சின்ன திருப்தி தான்... இந்த விஷயத்தையெல்லாம் மனசுல போட்டு குழப்பிக்கிட்டு, துாக்கத்தைத் தொலைக்கிறீங்களோன்னு, 'டவுட்' வருது!
பத்திரிகை செய்தி: முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாளை ஒட்டி, அவரது வீட்டுக்கு, அவரது அண்ணன் அழகிரி, தன் மகனுடன் சென்றார். முதல்வருக்கு பட்டு பொன்னாடை அணிவித்து வாழ்த்து கூறினார்.
டவுட் தனபாலு: அது எப்படிங்க, ஒவ்வொரு ஐந்தாண்டிலும், தேர்தலுக்கு முன்ன, மீடியாவுக்குத் தெரியிற மாதிரி, தம்பியைச் சந்திச்சு வாழ்த்து சொல்றீங்க... உங்க தம்பி என்னடான்னா, எதுக்கும் அசைந்து கொடுக்காம உங்களை அரசியல்லேர்ந்தே ஓரங்கட்டி வைக்க குறியா இருக்காரு... உங்க ரெண்டு பேரோட, 'ஈக்வேஷன்' யாருக்குமே புரியாம, நிறைய, 'டவுட்'களை கிளப்புதே!